Published:Updated:

வேலூர்: கட்சி அலுவலக சுற்றுச்சுவர் இடிப்பு! - காவல் நிலையம் வரை சென்ற காங்கிரஸ் பஞ்சாயத்து

இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர்
இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர்

பொருளாளர் பதவியிலிருந்து சி.கே.தேவேந்திரனை அதிரடியாக நீக்கினார் மாவட்டத் தலைவர் டீக்காராமன். பின்னர், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதே பொறுப்பில் நீடிக்கப்பட்டார் தேவேந்திரன்.

வேலூர் அண்ணா சாலையிலுள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்திருக்கிறது. கட்சியின் மாநகர மாவட்டத் தலைவராக டீக்காராமன் என்பவர் பொறுப்பு வகிக்கிறார். டீக்காராமன் தான்றோன்றித்தனமாக முடிவெடுப்பதாக கட்சிக்குள்ளேயே புகைச்சல் நிலவுகிறது. அவருக்கெதிராக இன்னொரு கோஷ்டி செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில், கட்சி அலுவலகம் முன்புள்ள காலி இடத்தில், மற்ற நிர்வாகிகளிடம் கலந்தாலோசிக்காமல், சில மாதங்களுக்கு முன் கன்டெய்னரில் டீக்கடை வைத்து வியாபாரத்துக்கு அடித்தளமிட்டார் டீக்காராமன். இதனால், கொதித்துப்போன எதிரணியைச் சேர்ந்த நிர்வாகி சி.கே.தேவேந்திரன் என்பவரும் அதே இடத்தில் தன் பங்குக்கும் டீக்கடை வைக்க முயன்றார்.

எதிரணி நிர்வாகிகள்
எதிரணி நிர்வாகிகள்

இதனால், இருத்தரப்புக்கும் மோதல் வெடித்தது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், இருத்தரப்பும் டீக்கடை நடத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் எதிரணியினர் கட்சி அலுவலகம் முன்பு சுற்றுச்சுவர் எழுப்பினர். இந்தச் சுற்றுச்சுவரை மாவட்டத் தலைவர் டீக்காராமன் தலைமையிலான ஆதரவாளர்கள் நேற்று இடித்துத் தள்ளினர். இதையறிந்த சி.கே.தேவேந்திரன் தலைமையிலான எதிரணியினர் அங்கு சென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளிய மாவட்டத் தலைவர் டீக்காராமன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூர் தெற்கு காவல் நிலையத்திலும் அவர்கள் புகாரளித்துள்ளனர்.

இந்த உட்கட்சி மோதல் குறித்து உள்விவரம் அறிந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘``மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டுவரும் இடம், முதலில் காமராஜர் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இருந்தது. அறக்கட்டளை உறுப்பினர்களாக இருந்தவர்கள் வெவ்வேறு கட்சிக்குச் சென்றுவிட்டதால், காங்கிரஸ் கட்சியே உரிமை கொண்டாடிவருகிறது. இப்போது, அந்தச் சொத்துகள் முன்பிருந்ததைப்போல் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. இப்போதுள்ள நிர்வாகிகள் சிலர் அபகரிக்க முயல்கிறார்கள். வேலூர் அண்ணா சாலையில், அரசுக்குச் சொந்தமான நிலங்களும், அலுவலகங்களும்தான் அதிகம் இருக்கின்றன. தனியாருக்குச் சொந்தமான நிலம், பெரிதாக இல்லை. தற்சமயம், காங்கிரஸ் வசமிருக்கும் இந்த இடத்தின் மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும்.

இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர்
இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர்

மாவட்ட தலைவராக டீக்காராமன் நியமிக்கப்பட்ட பிறகு வணிகரீதியாகப் பணம் பார்க்க முயற்சிகள் நடந்தன. 99 வருடங்களுக்கு லீஸுக்கு விடவும் அக்ரிமென்ட் போட முயற்சிகள் நடந்தன. அதைத் தடுத்தபோது, இரண்டு அடுக்கில் வணிக வளாகம் கட்ட முயற்சிக நடந்தது. இதையும் தடுத்ததால், இடத்தை தன் பெயருக்குப் பட்டா போட்டுக்கொள்ளவும் மாவட்டத் தலைவர் டீக்காராமன் முயன்றுவருகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

இந்த விவகாரத்தில்தான் மோதல் நிலவிவருவதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில், பொருளாளர் பதவியிலிருந்து சி.கே.தேவேந்திரனை அதிரடியாக நீக்கினார் மாவட்டத் தலைவர் டீக்காராமன். பின்னர், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதே பொறுப்பில் நீடிக்கப்பட்டார் தேவேந்திரன்’’ என்கிறார்கள் சூசகமாக.

இந்த மோதல் குறித்து விளக்கம் கேட்க காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர் டீக்காராமனைப் போனில் தொடர்புகொண்டோம். ஆனால் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் விளக்கம் தரும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு