Published:Updated:

`வளைவு சூரிய கிரகணத்தால் ஆண்களுக்கு ஆபத்தா?' - வேலூரில் விளக்கேற்றி வழிபட்ட விநோதம்

வளைவு சூரிய கிரகணத்தால், ஆண்களுக்கு ஆபத்து எனத் தகவல் பரவியதால் பெண்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டனர்.

வாசலில் விளக்கேற்றிய பெண்கள்
வாசலில் விளக்கேற்றிய பெண்கள்

இன்று காலை நிகழ்ந்த வளைவு சூரிய கிரகணத்தைப் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிரகணத்தைப் பொதுமக்கள் `வெறும் கண்களால் பார்க்கக் கூடாது’ என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சூரிய கிரகணத்தைக் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்
சூரிய கிரகணத்தைக் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

அதனால், சூரிய பிம்பத்தைத் திரையில் விழச்செய்து காண்பிக்க ஏதுவாக அறிவியல் மையத்தில் அதிநவீன `டெலஸ்கோப்’ வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வந்திருந்தனர்.

`டெலஸ்கோப்’ வழியாகக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர். `சோலார் ஃபில்டர்ஸ்’ கண்ணாடிகளை அணிந்தும் இரும்புப் பட்டறையில் `வெல்டிங்’ வைப்பவர்கள் உபயோகிக்கும் கண்ணாடியின் மூலமாகவும் கிரகணத்தைப் பார்த்து வியந்தனர்.

கிரகணத்தை மகளுக்குக் காண்பிக்கும் தாய்
கிரகணத்தை மகளுக்குக் காண்பிக்கும் தாய்

கிராமப்புற மக்கள் `எக்ஸ்ரே’ ஷீட் மூலமாகப் பார்த்தனர். கிரகணத்தால் `ஆண்களுக்கு ஆபத்து; ஜெபம் செய்தால் பலன்கள் கிடைக்கும்’ என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் வேலூரில் பல பகுதிகளில் பெண்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டனர். குறிப்பாக, காட்பாடி பகுதியில் பலரது வீட்டு வாசல்களில் விளக்கேற்றி வைக்கப்பட்டதைக் காண முடிந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் `வருது... வருது... வளைய சூரிய கிரகணம்; வானில் ஓர் நிழல் விளையாட்டு’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வளைவு சூரிய கிரகணம்
வளைவு சூரிய கிரகணம்

ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம் பகவத் கலந்துகொண்டு பேசினார். இதேபோல், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்குக் கிரகணம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.