Published:Updated:

`சாப்பிடக்கூட வழியில்லை; உதவித்தொகை கொடுங்க சார்!’ -கலெக்டர் அலுவலகத்தில் கலங்கிய மாற்றுத்திறனாளி

எழுந்து நடக்க முடியாத மாற்றுத்திறனாளி நபர், கலெக்டர் அலுவலகத்துக்கு நகர்ந்துவந்து மனு கொடுத்த நிகழ்வு கண்கலங்கச் செய்தது.

மாற்றுத்திறனாளி ராமு
மாற்றுத்திறனாளி ராமு

வேலூர் சத்துவாச்சாரி மடம் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் ராமு (60). பிறக்கும்போதே இவருக்கு, போலியோ பாதித்து இரண்டு கால்களும் சுருங்கிவிட்டதால், எழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாது. இப்படிப்பட்ட துயரநிலையில் வாழ்ந்துவரும் மாற்றுத்திறனாளி ராமுவுக்கு 92 வயது நிரம்பிய தாயும் உள்ளார்.

மாற்றுத்திறனாளி ராமு
மாற்றுத்திறனாளி ராமு

`இரண்டு பேரையும் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததாலும் அரசின் உதவித்தொகை கிடைக்காததாலும் வாழவே முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக’ விரக்தியுடன் கண்ணீர் வடிக்கிறார் ராமு. வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு உறவினரின் உதவியுடன் இன்று ஆட்டோவில் வந்தார் ராமு.

கால் முட்டியைத் தேய்த்தபடி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அரங்குக்குள் நகர்ந்துசென்றார். அங்கு, கலெக்டர் சண்முகசுந்தரம் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனைச் சந்தித்து, `மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கேட்டு’ மனு அளித்தார்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்
மக்கள் குறைதீர்வு கூட்டம்

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பரிசீலனை செய்வதாகக் கூறி ராமுவை அனுப்பினார். கவலை தோய்ந்த முகத்துடன் உடலை வருத்திக்கொண்டு வெளியே நகர்ந்துவந்தவரால், பேச முடியவில்லை.

நம்மிடம் பேசிய ராமுவின் உறவினர்கள், `` தாசில்தாரிடமும் பல அதிகாரிகளிடமும் மனு கொடுக்க நடந்து நடந்து அவருடைய கால்முட்டி தேய்ந்ததுதான் மிச்சம். உதவித்தொகை கொடுக்க மறுக்கிறார்கள், அலைக்கழிக்கிறார்கள். இனியும் வாழணுமானு நினைக்கிற அளவுக்கு வேதனையில் இருக்கிறார். சாப்பிடக் கூட கையில் காசில்லாத அளவுக்குக் கஷ்டத்தில் இருக்கிறார். 1,500 ரூபாய் உதவித்தொகை கிடைச்சா... ராமுவுக்கு கடைசி காலத்தில் உதவியா இருக்கும்’ என்கின்றனர் வேதனையோடு.

மாற்றுத்திறனாளி ராமு
மாற்றுத்திறனாளி ராமு

`இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளைக் காத்திருக்கச் செய்வதும் அலைக்கழிப்பதும் மிகக் கொடுமையான செயல். அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுப்பதே அரசின் கடமை. ராமுவுக்கு விரைவில் உதவித்தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்பதே வேலூர் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.