Published:Updated:

`சிகிச்சைக்கான பணம்; தவறவிட்ட நேபாளப் பெண்கள்!’ -வேலூர் ஆட்டோ டிரைவரின் நேர்மையைக் கௌரவித்த போலீஸ்

வேலூரில், நேபாளப் பெண்கள் தவறவிட்ட பணப்பையை, மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரைக் காவல்துறையினர் கௌரவப்படுத்தினர்.

ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டிய காவல்துறை
ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டிய காவல்துறை

நேபாளத்தைச் சேர்ந்தவர் அமிர்தராய் (38). இவர், தன் உறவுக்காரப் பெண்ணுடன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு வந்தார். இங்குள்ள லாட்ஜில் தங்கியிருந்த அந்த இரண்டு பெண்களும், வேலூரில் உள்ள சுற்றுலாத் தளங்களைச் சுற்றிப்பார்க்க விருப்பப்பட்டனர்.

வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை

நேற்று அவர்கள் இருவரும் வேலூர் கோட்டைக்குச் சென்றனர். ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு, அதன் தொன்மையான நாகரிகத்தைத் தெரிந்துகொண்டு வியந்துபோயினர். பின்னர், லாட்ஜுக்குத் திரும்புவதற்காக, ரத்தினகிரி நந்தியாலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் ஆட்டோவில் ஏறினர். 

ஆட்டோக்காரர், சி.எம்.சி மருத்துவமனை அருகே அவர்களை இறக்கிவிட்டார். அந்தப் பெண்கள் பணப்பையை ஆட்டோவிலேயே தவறவிட்டுச் சென்றுவிட்டனர். ஆட்டோ ஓட்டுநரும், இதைக் கவனிக்காமல் வேறு சவாரிக்காகச் சென்றுவிட்டார். அதன் பிறகே, இருக்கையில் பை கிடப்பதைப் பார்த்தார். 

பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர் நாகராஜன்
பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர் நாகராஜன்

அதில், ரூ.25,000 பணமும் இரண்டு ஏ.டி.எம் கார்டுகளும் இருந்தன. அந்தப் பையை நேபாளப் பெண்களிடம் கொடுப்பதற்காக மீண்டும் சி.எம்.சி பகுதிக்கு வந்து தேடினார். ஆனால், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதையடுத்து, வேலூர் வடக்குக் காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டர் நாகராஜனிடம் அந்தப் பணப்பையை ஒப்படைத்தார். அந்த நேரத்தில், புகார் அளிக்க நேபாளப் பெண்களும் காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு பணப்பையை இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். 

ஆட்டோ ஓட்டுநரைக் கௌரவப்படுத்திய காவல்துறையினர்
ஆட்டோ ஓட்டுநரைக் கௌரவப்படுத்திய காவல்துறையினர்

மேலும், ஆட்டோ ஓட்டுநர் சரவணனின் நேர்மையைப் பாராட்டி இன்ஸ்பெக்டர் நாகராஜன் ரூ.500 பரிசாகக் கொடுத்தார். நேபாளப் பெண்களும் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி ரூ.2000 வழங்கினர். பின்னர், அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவப்படுத்தினார் இன்ஸ்பெக்டர் நாகராஜன்.