Published:Updated:

`அவர் இல்லை; மகளுடன் வறுமையில் தவிக்கிறேன்!’ -முதல்வரின் காலில் விழுந்து கதறிய போலீஸ்காரரின் மனைவி

முதல்வரின் காலில் விழுந்த போலீஸ்காரரின் மனைவி
முதல்வரின் காலில் விழுந்த போலீஸ்காரரின் மனைவி

பணியின்போது உயிரிழந்த வேலூர் போலீஸ்காரரின் மனைவி தன் குழந்தையுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ரத சப்தமி உற்சவத்தையொட்டி, இன்றுகாலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதியில் உலா வருகிறார். இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வதற்காகக் குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றார்.

எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற அமைச்சர் வீரமணி
எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற அமைச்சர் வீரமணி

இன்றுகாலையில், முதல் வாகனசேவையான சூரிய பிரபை சேவையில் கலந்துகொண்டு ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் முதல்வருக்குப் பிரசாதங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதையடுத்து, வேலூர் வழியாகச் சேலம் திரும்பிய முதல்வருக்குக் காட்பாடியில் அ.தி.மு.க சார்பிலும் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, நரிக்குறவர் ஒருவர் தன் விரலில் இருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி முதல்வரிடம் கொடுத்து அவர் கையால் தன் விரலிலேயே போட்டுவிடுமாறு கூறினார். முதல்வரும் மோதிரத்தை நரிக்குறவருக்குப் போட்டுவிட்டார். `முதல்வருக்குத் தங்க மோதிரத்தைப் பரிசாகக் கொடுக்கலையா, இதென்னடா புதுவிளையாட்டா இருக்கு’ என்று அ.தி.மு.க-வினர் கலகலத்தனர்.

நடனமாடிய நரிக்குறவப் பெண்கள்
நடனமாடிய நரிக்குறவப் பெண்கள்

அப்போது, மகளுடன் இளம்பெண் ஒருவர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். ``தன் கணவர் காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தபோது திடீரென உயிரிழந்துவிட்டார். மாதாந்திர உதவித்தொகை கிடைக்காததால், மகளுடன் மிகவும் வறுமையில் இருக்கின்றேன். அரசு வேலை வழங்கவேண்டும்’’ என்றார் உருக்கமாக.

முதல்வரும் அதிகாரிகளை அழைத்து, இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். நம்மிடம் பேசிய அந்தப் பெண், ``என் பெயர் அனிதா, 28 வயதாகிறது. கணவர் சக்திவேல் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை செய்துவந்தார். 2013-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு என் கணவர் இறந்துவிட்டார்.

முதல்வரின் காலில் விழுந்த போலீஸ்காரரின் மனைவி
முதல்வரின் காலில் விழுந்த போலீஸ்காரரின் மனைவி

அப்போது அவருக்கு 32 வயதுதான். முதல்வரின் பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சம் கொடுத்தனர். ஆனால், 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர் என்பதால் உதவித்தொகை வழங்கப்படவில்லை. என் மகள் தீபலட்சுமிக்கு 9 வயதுதான் ஆகிறது. கணவர் இறந்தபோது அவளுக்கு 2 வயது. தந்தையின் முகம் கூட அவளுக்கு அவ்வளவாக ஞாபகம் இல்லை.

எனக்கென்று யாருமில்லை. குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. எம்.ஏ பொருளாதாரப் பட்டப் படிப்பு படித்துள்ளேன். டைப்பிங், கம்ப்யூட்டர் பயிற்சியைக் கற்றிருக்கிறேன். ஆனாலும், சரியான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தனியார் பள்ளியில் தற்காலிகமாகக் கிடைத்த வேலையைச் செய்கிறேன்.

மாணவிகளுக்கு கைகொடுத்த எடப்பாடி பழனிசாமி
மாணவிகளுக்கு கைகொடுத்த எடப்பாடி பழனிசாமி

பணியின்போது கணவர் இறந்துள்ளதால், எனக்கு அரசு வேலை வழங்கவேண்டும். முதல்வரைச் சந்தித்து, கோரிக்கை வைத்த பிறகு காவல்துறையினர் என் வீட்டுக்கு வந்து விவரங்களை வாங்கிச் சென்றுள்ளனர். எப்படியாவது, என் வாழ்வாதாரத்துக்கும் மகளின் எதிர்காலத்துக்கும் அரசு உதவிசெய்ய வேண்டும்’’ என்றார் கண்ணீர் மல்க.

அடுத்த கட்டுரைக்கு