வேலூர் சைதாப்பேட்டையில், ‘இந்திரா நர்சிங் ஹோம்’ என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் இயக்குநர் டாக்டர் பி.சங்கர். இந்த மருத்துவமனையில், ‘கொரோனா’ பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அறிகுறி உள்ளவர்களுக்குப் பரிசோதனை செய்யவும் அனுமதி இல்லை. இப்படியிருக்க, வேலூர் கொணவட்டத்தில் உள்ள இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையின் கிளை மருத்துவமனையில், கொரோனா பாதிப்புக்குள்ளான 52 வயது பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இதுபற்றி மருத்துவமனை தரப்பிலிருந்து மாவட்ட நிர்வாகத்துக்கும், சுகாதாரத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. தொற்றுக்குள்ளான அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்த பிறகு, சி.எம்.சி மருத்துவமனைக்கு யாருக்கும் தெரியாமல் அனுப்பிவைத்துள்ளனர். தற்போது, அந்தப் பெண், தீவிர சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த நிலையில், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் உத்தரவை மீறிச் செயல்பட்ட இந்திரா நர்சிங் ஹோமின் கிளை மருத்துவமனைக்கு கலெக்டரின் உத்தரவின் பேரில் அதிரடியாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேபோல், சைதாப்பேட்டையில் இயங்கிவரும் இந்திரா நர்சிங் ஹோமின் பிரதான மருத்துவமனையிலும் சிறப்பு மருத்துவர்களின் மூன்று அறைகள் அதிரடியாக மூடி, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. கொணவட்டம் பகுதியில், இந்த மருத்துவமனையுடன் தொடர்பிலிருந்த ஹுசைனியா மதனி கிளினிக் மற்றும் சுபாஷ் என்பவருக்குச் சொந்தமான அன்னை ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகியவற்றுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பணியாற்றிவரும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், இதர பணியாளர்களும் தற்போது கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனைக்கு வந்துசென்ற மருத்துவ நிபுணர்களும் நோயாளிகளும், சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நோயாளிகள், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தகவல்களைத் தெரிவித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். வேலூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் உரிய மருத்துவ ஆவணங்களுடன் சொந்த ஊருக்கு வாகனங்களில் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளையும் கலெக்டர் எடுத்துவருகிறார்.
சீல் வைக்கப்பட்ட இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையின் இயக்குநர் சங்கரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டோம்... "கொரோனா பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு முதலில் தொற்று இருப்பதே எங்களுக்குத் தெரியாது. பணத்துக்காக தவறான சிகிச்சையை அளிக்கவில்லை" என்றார்.