Published:Updated:

`10,000 குடும்பங்களுக்கு நிவாரணம்!’ -உதவிக்கரம் நீட்டிய வேலூர் ரஜினி மக்கள் மன்றம்

நிவாரண உதவி
நிவாரண உதவி

ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரணப் பொருள்களை வழங்குவதுடன் இயலாதோருக்கு தினமும் மதிய உணவுகளையும் வழங்கிவருகிறார்கள்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. லாக்டௌன் அமலுக்கு வந்த நாளிலிருந்து நேற்று வரை ரூ.11.60 லட்சம் மதிப்பில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொடுத்துள்ளனர். வேலூர் மாநகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களுக்குத் தொடர்ந்து 10 நாள்கள் இளநீர், பழச்சாறு, காலை உணவு வழங்கினர்.

நிவாரணப் பொருள்
நிவாரணப் பொருள்

இதைத்தவிர, ஆட்டோ ஓட்டுநர்கள், நலிந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்களை வழங்கியதுடன் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் கபசுரக் குடிநீரைத் தினமும் வழங்குகிறார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் வேலூர் மாநகரில் 5 டன் எடையுள்ள மளிகைப் பொருள்களை 400 தொகுப்புகளாகப் பிரித்து கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கினர். முன்னதாக நிவாரணம் பெற்ற நபர்களுக்கு முகக் கவசம் அணிவித்து தனிமனித இடைவெளியை விட்டு நிற்க வைத்தனர்.

ஆற்காடு நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான மளிகைப் பொருள்களும் காய்கறிகளும் வழங்கினர். வாலாஜாபேட்டை ஒன்றியம் சார்பில் அங்குள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை மூன்று இடங்களில் அமைத்துள்ளனர். நோயாளிகளுக்குச் சோப்புகளும் கைகழுவும் திரமும் வழங்கினர். அதேபோல், அரக்கோணம் நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஒன்றியப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தனர்.

நிவாரண உதவி
நிவாரண உதவி

வாணியம்பாடி நகரம் சார்பில் 1,000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் வழங்கி தூய்மைப் பணியாளர்களுக்கும் இரண்டு நாள்கள் உணவு கொடுத்தனர். இதேபோல் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், சோளிங்கர் ஆகிய பகுதிகளிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரணப் பொருள்களை வழங்கியதுடன் நாள்தோறும் முடிந்த அளவுக்கு இயலாதோருக்கு மதிய உணவுகளையும் வழங்கிவருகிறார்கள். இதற்கான மொத்த ஏற்பாடுகளும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி மேற்பார்வையில் நடைபெற்றுவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு