வேலூர் அதிர்ச்சி: குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி! - சிறுவன்மீது நடவடிக்கை

9-ம் வகுப்பு படிக்கும் மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம், வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காட்பாடியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இந்தநிலையில், அந்தச் சிறுமி பிரசவத்துக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பதாக நேற்று இரவு சமூக நலத்துறையின் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிக்குத் தகவல் கிடைத்தது. மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி உத்தரவின்பேரில், சேவை மைய நிர்வாகி பிரியங்கா மற்றும் சமூகப் பணியாளர் சாந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு இரவு நேரத்திலேயே விரைந்து சென்றனர்.

அந்த சமயத்தில் சிறுமிக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. சிறுமியின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகர தகவல் வெளியானது. சிறுமியின் எதிர் வீட்டில் வசிக்கும் 19 வயதுடைய சிறுவன்தான் குழந்தைக்குத் தந்தை என்பது தெரியவந்தது. இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், ஓராண்டுக்கு முன்னரே திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டைவிட்டு வெளியேறி ரகசியமாக மணமுடித்துக்கொண்டு வீடு திரும்பினர்.
தகவலறிந்து சென்ற சமூக நலத்துறை அலுவலர்கள் சிறுமியையும் சிறுவனையும் பிரித்து பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு, பெற்றோர்களின் பொறுப்பில் விட்டிருந்தனர். இந்தநிலையில், குழந்தை பிறந்துவிட்டால் இருவரையும் சேர்த்துவைத்துவிடுவார்கள் என்று திட்டமிட்டு குழந்தையைப் பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இளம் வயதில் இன்னொரு கருத்தரிப்பு நடக்கக் கூடாது என்பதால், சிறுவனைச் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையில் டெலிவரிக்கு வரும் பெண்களின் `ஹை ரிஸ்க்’ லிஸ்ட்டை எடுத்தாலே போதும். டீன் ஏஜில் கர்ப்பமடையும் விவரங்களைக் கண்டறியலாம். கடந்த வருட ஹை ரிஸ்க் லிஸ்ட்டை ஆய்வு செய்தபோது, மாவட்டம் முழுவதும் 154 மைனர் பெண்கள் டெலிவரிக்கு வந்து சென்றிருப்பது தெரிய வந்தது. அவர்களின் திருமணங்கள், அதிகாரிகள் கவனத்துக்கே வராமல் ரகசியமாக நடந்திருக்கின்றன. இதைத் தடுக்க இந்த ஆண்டு சமூக நலத்துறையினர் தீவிரமாகக் கண்காணிப்பதாக வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.