Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: `தந்தையைக் கொடுமைப்படுத்திய மகன்கள்!’ - சொத்துகளை மீட்டுக்கொடுத்த சப்-கலெக்டர்

உத்தரவு ஆணை வழங்கிய சப்-கலெக்டர் கணேஷ்
உத்தரவு ஆணை வழங்கிய சப்-கலெக்டர் கணேஷ்

வயது முதிர்ந்த தந்தையை வீட்டிலிருந்து அடித்துத் துரத்திய மூன்று மகன்களிடமிருந்து சொத்துகளைத் திரும்பப் பெற்று, தந்தையிடமே ஒப்படைத்திருக்கிறார், வேலூர் சப்-கலெக்டர் கணேஷ்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள பொன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவருக்கு வயது 82. ரைஸ்மில் நடத்திவந்த ரேணுகோபாலுக்கு ரூபசுந்தரி, மலர்விழி, லலிதா என்று மூன்று மகள்களும், கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் என்று மூன்று மகன்களும் இருக்கிறார்கள். கடந்த 2008-ம் ஆண்டு, மனைவி கோமளேஸ்வரி இறந்துவிட்டதால், நொந்துபோயிருந்த முதியவர் ரேணுகோபாலை, அவரது மூன்று மகன்களும் தாங்களே பார்த்துக்கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ரேணுகோபால்
ரேணுகோபால்

மகன்கள் தன்மீது உண்மையிலேயே பாசம்வைத்திருப்பதாக நினைத்த ரேணுகோபால், தன் பெயரிலிருந்த கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை 2013-ம் ஆண்டு மூன்று மகன்களுக்கும் பாகம் பிரித்து எழுதிக்கொடுத்திருக்கிறார். சொத்துகள் கைக்கு வந்த பிறகு தந்தை ரேணுகோபாலை மூன்று மகன்களும் உதறித் தள்ளினர். சாப்பிட உணவுகூடக் கொடுக்காமல் அடித்துத் துன்புறுத்தியதாகவும் மகன்கள்மீது குற்றம்சாட்டி கண்ணீர் சிந்துகிறார், முதியவர் ரேணுகோபால்.

வேலூர்:`தீபாவளி வசூல் வேட்டை!’ - விஜிலென்ஸ் அதிரடி ரெய்டில் சிக்கிய அதிகாரி

இந்தநிலையில், தன்னை கவனித்துக்கொள்ளாத மகன்களிடமிருந்து தன்னுடைய சொத்துகளைத் திரும்ப பெற்றுத் தருமாறு கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி வேலூர் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தார் ரேணுகோபால். இது தொடர்பாக நடைபெற்றுவந்த விசாரணையில், தந்தை என்றும் பாராமல் ரேணுகோபாலை மூன்று மகன்களும் அடித்துத் துன்புறுத்தியது தெரியவந்தது.

உத்தரவு ஆணை வழங்கிய சப்-கலெக்டர் கணேஷ்
உத்தரவு ஆணை வழங்கிய சப்-கலெக்டர் கணேஷ்

இதையடுத்து, பெற்றோர்-மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டத்தின்படி மகன்கள் பெயரில் ரேணுகோபால் எழுதிக்கொடுத்த செட்டில்மென்ட் பத்திர ஆவணத்தை அதிரடியாக ரத்துசெய்து மீண்டும் முதியவர் ரேணுகோபாலின் பெயருக்கே கிரயம் செய்து கொடுத்திருக்கிறார் சப்-கலெக்டர் கணேஷ். இதற்கான உத்தரவு ஆணையையும் முதியவர் ரேணுகோபாலை நேரில் வரவழைத்துக் கொடுத்த சப்-கலெக்டர் கணேஷை பொதுமக்கள் பாராட்டிவருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு