Published:Updated:

`விபத்தில் மூளைச்சாவு; உடல் உறுப்புகள் தானம்!’ - 4 பேருக்கு வாழ்வு கொடுத்த வேலூர் ஆசிரியர்

விபத்தில் சிக்கியதில், மூளைச்சாவு ஏற்பட்ட வேலூர் ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

ஆசிரியர் வாசுதேவன்
ஆசிரியர் வாசுதேவன்

வேலூரை அடுத்த குகையநல்லூர் கலிவர்தாங்கல் கிராமம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன் (49). இவர், ஒடுகத்தூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார். இவரின் மனைவி மஞ்சுளாவும் ஆசிரியைதான். 

சி.எம்.சி மருத்துவமனை
சி.எம்.சி மருத்துவமனை

இவர்களுக்கு சங்கீத்குமார் (22) என்ற மகனும் தீனுபிரியா (19) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி காலை, கார்ணாம்பட்டு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வாசுதேவன் சென்றுகொண்டிருந்தார். 

தமிழகத்தில் 11 ஆண்டுகளில் 1,291 பேர் உடலுறுப்பு தானம்!

அப்போது, ஏற்பட்ட சாலை விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் வாசுதேவனை மீட்டு சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயன்று வந்தனர்.

மருத்துவக் குழு சான்றிதழ்
மருத்துவக் குழு சான்றிதழ்

எனினும், நேற்று மாலை திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. மருத்துவக் குழு உறுதி செய்ததையடுத்து, வாசுதேவனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய கனத்த இதயத்துடன் குடும்பத்தினர் சம்மதித்தனர்.

இதயம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. கல்லீரலும் மற்றொரு சிறுநீரகமும் சி.எம்.சி மருத்துவமனையே எடுத்துக்கொண்டது. கண்களை மட்டும் எடுக்கச் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பிவைக்கப்பட்டது. 

வாசுதேவன்
வாசுதேவன்

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மீளா துயரத்துடன் ஆசிரியர் வாசுதேவனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. ‘உடல் உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் நான்கு பேருக்கு வாழ்வு கொடுத்துவிட்டு இம்மண்ணில் ஆசிரியர் வாசுதேவன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்’ என்று மனம் உருகச் செய்தனர் குடும்பத்தினர்.