Published:Updated:

`புதிய மாவட்டங்களாக 28-ம் தேதி உதயம்!’ -திருப்பத்தூர், ராணிப்பேட்டைக்கு பிரியாவிடை கொடுக்கும் வேலூர்

வேலூரிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் வரும் 28-ம் தேதி நிர்வாக ரீதியாக உதயமாகிறது.

வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை

பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமான வேலூரை நிர்வாக வசதிக்காகப் பிரித்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தின் கலெக்டராக சிவன் அருள், எஸ்.பி-யாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தின் கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி விஜயகுமார்
திருப்பத்தூர் மாவட்டத்தின் கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி விஜயகுமார்

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டராக திவ்யதர்ஷினியும், எஸ்.பி-யாக மயில்வாகனனும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். புதிய மாவட்டங்களுக்கான கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களையும் கட்டுவதற்கான இடங்கள் விறுவிறுப்பாகத் தேர்வுசெய்யப்பட்டுவருகின்றன. 

இந்த நிலையில், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28-ம் தேதி தொடங்கிவைக்க உள்ளார். திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா அன்று காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணி வரை நடக்கிறது. ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா அன்று மதியம் 12.30 மணியிலிருந்து 1.30 மணி வரை நடைபெற உள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் திவ்யதர்ஷினி, எஸ்.பி மயில்வாகனன்
ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் திவ்யதர்ஷினி, எஸ்.பி மயில்வாகனன்

இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் உட்பட பலர் கலந்துகொள்கிறார்கள். 

முன்னதாக, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் வரும் 23-ம் தேதி புதிய மாவட்டங்களை ஆய்வு செய்கிறார்கள். ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் அமைய உள்ள கலெக்டர் அலுவலகங்களையும் பார்வையிடுகிறார்கள். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேலும், புதிய மாவட்டங்கள் தொடக்க விழா பணிகள் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். புதிய மாவட்டங்களாக உதயமாவதையொட்டி, திருப்பத்தூரும், ராணிப்பேட்டையும் கொண்டாட்டத்துக்குத் தயாராகிவருகின்றன. வேலூர் மக்களும் மகிழ்ச்சியுடன் பிரியாவிடை கொடுக்கிறார்கள்.