Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: `கொரோனா ஒழிந்து மக்கள் நலம் பெறணும்!' - கும்மியடித்து வழிபட்ட திருநங்கைகள்

கும்மியடித்து வழிபட்ட திருநங்கைகள்
கும்மியடித்து வழிபட்ட திருநங்கைகள்

``கொரோனா ஒழிந்து நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதற்காகத்தான் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தோம். பொதுமக்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்."

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் வந்து திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால், தங்கள் பகுதியிலிருந்தபடியே கூத்தாண்டவரைத் திருநங்கைகள் வழிபட்டு வருகிறார்கள்.

தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

அதன்படி, வேலூர் ஓல்டு டவுன் பஜனை கோயில் தெருவில் எளிமையான முறையில் கூத்தாண்டவர் திருவிழாவைத் திருநங்கைகள் கொண்டாடினர். அரவானை அலங்கரித்து சிறப்பு பூஜைகளைச் செய்தனர். இதில், நூற்றுக்கும் அதிகமான திருநங்கைகள் கலந்துகொண்டு கொரோனா ஒழிய வேண்டி கும்மியடித்து வழிபட்டனர். தொடர்ந்து, தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளர் கங்காநாயக் தலைமையிலான திருநங்கைகள், பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.

பின்னர், கற்பூரம் ஏற்றி சூரைத்தேங்காய் உடைத்து வழிபட்டனர். கற்பூரத்தைச் சுற்றிவந்து கும்மியடித்து பாட்டுப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதையடுத்து, கூத்தாண்டவருக்குச் சிறப்பு அலங்காரம் செய்து ஊர்வலமாக சலவன்பேட்டை சுடுகாட்டுக்குச் சென்றனர். அங்கு தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களைப் பிய்த்தும், நெற்றியிலுள்ள குங்குமத்தை அழித்தும், கையிலிருந்த வளையல்களைத் தட்டி உடைத்தும் கழுத்திலிருந்த தாலியை அறுத்துக்கொண்டு அழுதனர்.

தேங்காய் உடைத்து வழிபாடு
தேங்காய் உடைத்து வழிபாடு

தொடர்ந்து, நீரில் தலை மூழ்கி வெள்ளாடை உடுத்திக்கொண்டனர். திருவிழாவில் பங்கேற்ற திருநங்கைகள் அனைவரும் சில நாள்களுக்கு முன்னரே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து, விழாவில் பங்கேற்ற திருநங்கைகள் சிலர் கூறுகையில், ``கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறவில்லை. கொரோனா ஒழிந்து நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதற்காகத்தான் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தோம். பொதுமக்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். அடுத்தாண்டு கூவாகத்துக்குச் சென்று திருவிழாவில் பங்கேற்க வேண்டும்’’ என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு