Published:Updated:

`கழுத்தளவு தண்ணீரில் சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் மக்கள்!’ - வேலூர் அவலம்

அணைக்கட்டு அருகே ஆற்றைக் கடந்து சுடுகாட்டுக்குச் செல்ல பாலம் கட்டித்தராததால், கழுத்தளவு பாயும் தண்ணீரில் கிராம மக்கள் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலநிலை தொடர்கிறது. 

சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள்
சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்பாடி கிராமம் அருகே உள்ள மலையில் உருவாகும் பேயாறு குறுகிய தூரம் பயணித்து, பாலாற்றில் இணைகிறது. இந்த பேயாற்றைக் கடந்துதான் சேர்பாடி ஊர் மக்கள் இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும். 

சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள்
சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள்

பாலம் இல்லாத காரணத்தால், சடலத்தைத் தண்ணீரிலேயே தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து சுடுகாட்டுக்குச் செல்கிறார்கள். ஆற்றுப் பாலம் அமைத்துத் தருமாறு கிராம மக்கள் பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். இது சம்பந்தமாகத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமாரிடமும் முறையிட்டனர். 

இந்தப் பிரச்னையைத் தீவிரமாகக் கையில் எடுத்த எம்.எல்.ஏ நந்தகுமார் உடனே மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். கலெக்டரை பலமுறை நேரில் சந்தித்தும் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தார். எனினும், ஆற்றுப் பாலம் அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவலநிலை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. 

சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள்
சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள்

இந்த நிலையில், தற்போது பெய்துவரும் பலத்த மழையால் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. ஆற்றைக் கடந்துசெல்லவே முடியாத சூழல் இருக்கும் நிலையிலும் வேறு வசதி இல்லாததால் கழுத்தளவு பாயும் தண்ணீரில் சிரமப்பட்டு சடலத்தை தூக்கிச் செல்கிறார்கள். நேற்று கருப்பாயி என்ற மூதாட்டி உயிரிழந்தார். அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. 

உறவினர்கள் கழுத்தளவு தண்ணீரில் சடலம் இருந்த பாடையை சுமந்துகொண்டு ஆற்றைக் கடந்து சுடுகாட்டுக்குச் சென்றனர். நீச்சல் தெரியாதவர்கள் சுடுகாட்டுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். இந்த காட்சிகளை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்தக் காட்சிகள் வைரலாகி மனதை உலுக்கியிருக்கின்றன.

எம்.எல்.ஏ நந்தகுமார்
எம்.எல்.ஏ நந்தகுமார்

இதுபற்றி அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் கூறுகையில், ``இந்த பிரச்னைக்குத் தீர்வுகாண கலெக்டரிடம் பலமுறை மனுக் கொடுத்திருக்கிறேன். எந்த பிரயோஜனமும் இல்லை. ஆற்றைக் கடக்க பாலம் கட்டிக்கொடுத்தால் சுடுகாட்டுக்குச் செல்ல வசதியாக இருக்கும். இன்றைக்கு நடைபெற்ற சம்பவத்தையும் கலெக்டரின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளேன். அவர் உடனே இப்பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும்’’ என்றார்.