Published:Updated:

ஏழைக் குடும்பங்களுக்கு உதவி டு எடப்பாடி ட்வீட் வரை! -வேலூரை அசத்தும் ஐ.டி இளைஞர்

உணவு வழங்கும் தினேஷ் சரவணன்
உணவு வழங்கும் தினேஷ் சரவணன்

`நல் உள்ளம் கொண்ட நண்பர்கள் பலர் வெளியிலிருந்து பண உதவி செய்கிறார்கள். அதனால்தான் என்னால் உதவ முடிகிறது' என்கிறார், வேலூரைச் சேர்ந்த தினேஷ் சரவணன்.

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர், தினேஷ் சரவணன் (30). சென்னையில், ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் இந்த இளைஞர், வேலூரில் பல்வேறு சமூக சேவைகளைச் செய்துவருகிறார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களைத் தேடிச்சென்று உதவிவருகிறார். சமீபத்தில், ஏழைப் பெண்ணுக்கு தள்ளுவண்டியை வாங்கிக் கொடுத்து, முதல்நாள் வருமானத்துக்காக காய்கறிகளையும் நிரப்பி, வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்துகொடுத்து நெகிழ வைத்தார்.

மளிகைப் பொருள் கொடுத்து உதவி
மளிகைப் பொருள் கொடுத்து உதவி

ஊரடங்கு அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுநாள் வரை சாலையோரம் தங்கியிருக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு வழங்கிவருகிறார். மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களைக் கொடுத்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நாப்கின் பாக்கெட்டுகளை வழங்கியிருக்கிறார். தெருவில் உணவு கிடைக்காமல் சுற்றித் திரியும் நாய்களுக்கும், காடு, மலைகளில் உள்ள குரங்குகளுக்கும் உணவு கொடுத்து பசியாற்றிவருகிறார்.

இவரது சேவையைப் பாராட்டி கடந்த மாதம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ட்விட்டரில் பாராட்டியிருந்தார். தினேஷ் சரணவனின் பதிவுக்கு ‘ரீ-ட்வீட்’ செய்திருந்த முதலமைச்சர், `ஐ.டி நிறுவனத்தில் வேலை புரிகின்றபோதும், கிடைக்கின்ற நேரத்தில் கடைக்கோடி மக்களைத் தேடி உதவுதல், மரக்கன்று நடுதல் எனப் பல்வேறு சேவைகள் செய்வதை சமூக வலைதளம் மூலம் அறிந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சரின் ட்விட்டர் பாராட்டு
முதலமைச்சரின் ட்விட்டர் பாராட்டு

தினேஷ் சரவணனிடம் பேசினோம்.

‘‘ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் இதுவரை, 3,050 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளேன். தினமும் காலை 50 பேர், மதியம் 80 பேர் என 130 பேருக்கு இலவசமாக உணவு வழங்கிவருகிறேன். ஊரடங்கில் மட்டும் 14,20,000 ரூபாய் செலவாகியிருக்கிறது. தொடர்ந்து உதவி செய்வதற்கு வெளியிலிருந்து நல் உள்ளம் கொண்ட நண்பர்கள் பலர் பண உதவி செய்கிறார்கள்’’ என்றார் புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு