Published:Updated:

`தூய்மையான இசை ஆன்மாவை செம்மைப்படுத்தும்!'- திருவையாறில் நெகிழ்ந்த வெங்கய்யா நாயுடு

தியாகராஜர்
தியாகராஜர்

நமது கலாசாரத்தில் மக்களை இணைக்கும் வல்லமை கொண்ட அம்சங்களில் ஒன்றாக இசை உள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இசை உதவுகிறது. தூய்மையான இசை என்பது, நமது ஆன்மாக்களை செம்மைப்படுத்தக் கூடியது என திருவையாறில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 173 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று தொடங்கி வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினமே விழாவின் முக்கிய நிகழ்வான பல்வேறு இசை கலைஞர்கள் கலந்து கொள்ளும் பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற உள்ளது. இந்த விழாவை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு துவக்கி வைத்தார்.

 வெங்கய்யா நாயுடு
வெங்கய்யா நாயுடு
ம.அரவிந்த்

இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, சபா செயலரான அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் வரவேற்று பேசினார்.

பின்னர் வெங்கய்யா நாயுடு பேசியதாவது, ``இசை உலகில் உயர்ந்த இடத்தைப் பிடித்த, ஆளுமை மிக்கவராக தியாகராஜ சுவாமிகள் இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நமது கலாசார பாரம்பர்யத்தை செம்மைப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்புகளை அளவிடவோ, மதிப்பிடவோ முடியாது. அது எல்லையில்லாத அளவுக்கு இருக்கிறது. நூற்றாண்டுகளாக பெருமைக்குரியதாக இருக்கும் அவருடைய பாடல்கள், வருங்காலத்திலும் இளைஞர்கள் மற்றும் மூத்தவர்களால் பொக்கிஷமாக கருதப்படும்.

வெங்கய்யா நாயுடு
வெங்கய்யா நாயுடு

உலகின் மிகவும் பழைமையான நாகரிக வளர்ச்சி கொண்ட நாடுகளான ரோம், பாபிலோனியம், கிரேக்கம், ஏதென்ஸ், எகிப்து போன்றவற்றின் வரிசையில் இந்தியாவும் ஒன்று. இவற்றில் இந்திய கலாசாரம் மட்டுமே நீடித்து இருக்கிறது. நமது நாகரீக வளர்ச்சியின் தத்துவம் எப்போதும் வசுதெய்வ குடும்பம் என்பதாக உள்ளது. உலகம் மக்கள் அனைவரையும் நாம் எப்போதும் அரவணைத்துக் கொண்டிருக்கிறோம். தொன்மையான இந்த கலாசாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

நம் நாடு பன்முக கலாச்சாரத்தின் தாயகமாக உள்ளது. பல்வேறு கலாசாரங்களை உள்ளடக்கியதாக வர்ணிக்கப்படும் இந்திய கலாசாரம், இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவியுள்ளது. பல லட்சம் ஆண்டு கால வரலாற்றின் தாக்கத்தால் இது உருவாகியுள்ளது.

வெங்கய்யா நாயுடு
வெங்கய்யா நாயுடு

நமது கலாச்சாரத்தின் பன்முக அம்சங்கள் குறித்து மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் நமது கல்வி நிலையங்களும் முயற்சி எடுக்க வேண்டும். இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தின் மதங்கள், தத்துவங்கள், உணவு வகைகள், மொழிகள், நடனம், இசை, யோகா, திரைப்படங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உலகெங்கும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

நமது கலாசாரம் மக்களை இணைக்கும் வல்லமை கொண்ட அம்சங்களில் ஒன்றாக இசை உள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அது உதவுகிறது. தூய்மையான இசை என்பது, நமது ஆன்மாக்களை செம்மைப்படுத்தக் கூடியது. நமது கலாச்சாரப் பொக்கிஷங்களை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதுவே, இதைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழியாக இருக்கும்.

வெங்கய்யா நாயுடு
வெங்கய்யா நாயுடு

தியாகராஜ சுவாமிகள் போன்ற ஆளுமை மிக்கவர்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய கலாசாரம் எவ்வளவு புகழ்மிக்கது என்பதை அறிந்து அவர்கள் பெருமைப்பட வேண்டும். இசை மக்களை ஒருங்கிணைக்கிறது. நம்முடைய இசை உலக புகழ்பெற்றது. இசையில் நாம் கவனம் செலுத்தினால் நம் மனதும் மேம்படும். அதன் மூலம் இந்த நாடும் வளம் பெறும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு