Published:Updated:

`ஒவ்வொருவருக்கும் தாய்மொழி கண் போன்றது; இந்தித் திணிப்பு கூடாது!' - துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

`பருவநிலை மாற்றங்களைச் சரி செய்யாவிட்டால் பாதிப்புகள் நிரந்தரமாகிவிடும்' என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், திருச்சி தேசியக்கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராமன், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். வெங்கையா நாயுடு வருகையால் முதல்நாள் நள்ளிரவிலிருந்தே திருச்சி ரெட் அலர்ட் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையம் முதல் தேசியக்கல்லூரி மட்டுமல்லாமல், பல பகுதிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்தன. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகே, விழாவுக்கு வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி அஞ்சல் துறையின் தலைமை மாஸ்டர் ஜென்ரல் சுமதி ரவிசந்திரன் சிறப்பு அஞ்சல் உரையைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து தேசியக் கல்லூரி நிர்வாகக்குழு துணைத் தலைவர் ஜேகர் முன்னிலையில் அஞ்சல் உரை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு,``மகாத்மா காந்தியடிகளும், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் பலமுறை உரையாற்றிய பெருமைமிக்க இந்தக் கல்லூரியின் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழகத்தின் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் கல்வித் தேவைகளை இந்தக் கல்லூரி நிறைவு செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியடைய வைக்கிறது.

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

உயர்கல்வி மொத்த மாணவர் சேர்க்கை விகிதாசாரத்தில் தமிழகம் 46.9 சதவிகிதத்துடன் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. தேசியக் கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், கிராமப்பகுதிகளில் ஆற்றிவரும் அர்ப்பணிப்புடன் கூடிய கல்விச் சேவைகளே, இந்நிலையை அடைய உதவியுள்ளது. ஐந்து முதல் 24 வயது வரையிலான சுமார் 50 கோடி பேரைக் கொண்டுள்ள இந்தியா, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக்கொண்ட நாடாக உள்ளது. அதனால், நாட்டில் கல்வித்துறை வளர்ச்சியடைய பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய இளையோர் எண்ணிக்கைப் பெருக்கம், கடந்த சில பத்தாண்டுகளில் கூடுதலான கல்வி விரிவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தறிவுதான் அதிகாரம் அளிப்பதற்கு முதலாவது படி என்கிற நிலை.

இந்தியாவில் அதிக வளம் இருந்தும் இன்னும் 20 சதவிகித மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள். 12ம் வகுப்பு முடித்து உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் 46.9 சதவிகிதம் உள்ளார்கள். ஆனால், உலகளவில் ஒப்பிடும்போது இந்தியா 26.3 சதவிகிதம் உள்ளது. அவரவர் தாய்மொழி அவரவர்களுக்குக் கண். இந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால், அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. நான் இந்தி கற்றுக்கொண்டதால்தான் நாட்டின் இரண்டாவது குடிமகனாக உள்ளேன். இந்து மதத்தில் சாதியை முன்னிறுத்துவது கிடையாது. புராணத்திலும் அப்படி குறிப்பிடவில்லை. பெண்களை மதிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் மூன்றாவது நாடாக இந்தியா விளங்கும். அவரவர் தாய்மொழியில் பெற்றோர்களை அழைக்க வேண்டும்'' என்றார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனைப் பார்த்து, `உங்கள் அம்மா ஜெயலலிதாவைக் குறிப்பிடவில்லை' என்று வெங்கையா நாயுடு விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், ``நாட்டில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி, போன்ற உலகச் சிறப்புமிக்க கல்வி நிறுவனங்கள் உள்ள போதிலும், டைம்ஸ் உயர்கல்வி உலகப் பல்கலைக்கழகங்கள் 2020 தரவரிசையில், முதல் 500 பல்கலைக்கழகங்களில் இந்திய நிறுவனங்கள் 56 மட்டுமே இடம் பெற்றுள்ளதும், அதில் முதல் 300 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றுகூட இடம் பெறவில்லை.

பண்டைக்காலத்தில் நாளந்தா, தட்சசீலா, விக்கிரமசீலா போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைக் கொண்டிருந்த இந்தியா, உலகின் ஆசிரியர் என்று பொருள்படும் `விஷ்வகுரு’ பட்டத்தைப் பெற்றிருந்தது.

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

இத்தகைய தொன்மைக்கால புகழை மீட்டெடுக்க, நமது நவீன கல்விமுறையில் தெரிவுசெய்த பண்டைக்காலப் பாடங்கள், நடைமுறைகள், ஆகியவற்றை இன்றைய உலக சவால்களுக்கு ஏற்ப மாற்றியமைத்து இணைக்க வேண்டும். பண்டைய கல்விப் பொக்கிஷங்களைப் பாதுகாத்து நமது இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்காவிட்டால், அவர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஆகிவிடுவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியார் துறையினர் கல்வியில் முதலீடு செய்து தீவிரமான ஆர்வத்துடன் அதில் ஈடுபட வேண்டும். இந்தியாவின் கல்வி எதிர்காலம், திறன்மிக்கப் பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஒத்துழைப்பு மாதிரியில்தான் அடங்கியுள்ளது.

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

விண்வெளித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியா, உலகின் உற்பத்தி மையமாகவும் மனித வளத்தின் தலைநகரமாகவும் உயரும் திறன் பெற்றது. ஆனால், இந்த இலக்குகளை அடைய, நமக்குப் பெருமளவிலான பயிற்சி பெற்ற இளைஞர்கள் தேவை. நமது பல்கலைக்கழகங்கள் திறன் பயிற்சி அளிப்பதில் மிகச்சிறந்த மையங்களாக மாற வேண்டும்'' என்றார்.

மேலும், ``ஆராய்ச்சிகள் டாக்டர் பட்டங்களுக்காக மட்டுமன்றி பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பு மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, புதுமைப் படைப்பு பல்கலைக்கழகங்களின் பண்பாடாகவே மாறும் வகையில் அமைய வேண்டும். மாணவர்கள் எத்தகைய பாடங்களைத் தெரிவு செய்து படித்தாலும், நமது நாட்டின் வளமிக்க வரலாறு, நாட்டின் பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். பண்டைய வரலாற்றிலிருந்து உத்வேகம் பெறும் மாணவர்கள், மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவார்கள்.

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

சமீபகாலமாகப் பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை உலகம் அனுபவித்து வரும் நிலையில், இதைச் சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், பாதிப்பு நிரந்தரமாகிவிடும். இப்புவியின் அறங்காவலர்களான நாம், அதன் வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அளிப்பது, நமது புனிதக்கடமை.

பன்முகத்தன்மையும், துடிப்பும் கொண்ட இந்தியாவின் ஜனநாயக நன்னெறிகளைப் பாதுகாக்க, அறிவுசார்ந்த நேர்மையான, சமூக உணர்வுகொண்ட, கருணைச் சிந்தனை உடையக் குடிமக்களை உருவாக்க வேண்டியது நமது கல்வி நிறுவனங்களின் கடமை. அதனால், நமது கல்விமுறை, நன்னெறிகள் அடிப்படையிலானதாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும்'' என்றும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு