Published:Updated:

`மாணவிகளுக்குப் பெரியார் புத்தகம் விநியோகம்'- வி.ஹெச்.பி எதிர்ப்பால் பின்வாங்கிய கல்வித்துறை!

பெரியார் புத்தகத்தைத் திரும்பப் பெறாமல் இருந்தால் அயோத்தி ராமஜென்ம பூமியின் வரலாறு என்ற புத்தகத்தை நாங்களும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் வழங்கி தேர்வு நடத்துவோம் என்றனர் வி.ஹெச்.பி-யினர்.

பெரியார் 1000 புத்தகம்
பெரியார் 1000 புத்தகம்

பெரியார் பிஞ்சு வெளியீடு அச்சிட்ட `பெரியார் 1000 வினா விடை' என்ற புத்தகத்திலிருந்து மாணவ, மாணவிகளுக்குத் தேர்வு நடத்தி பரிசு வழங்கும் திட்டத்தை ஓர் அமைப்பு செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கவிமணி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியிலும் அந்தப் புத்தகம் மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது. அதை அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மனு அளிக்க வந்த வி.ஹெச்.பி.யினர்
மனு அளிக்க வந்த வி.ஹெச்.பி.யினர்

இந்தச் சம்பவம் வி.ஹெச்.பி அமைப்பினருக்குத் தெரியவரவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து வி.ஹெச்.பி மாநில இணைச்செயலாளர் காளியப்பன் கூறுகையில், ``பாடத்திட்டத்தில் இல்லாத `பெரியார் 1000 வினா விடை' என்ற புத்தகத்தைப் பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளுக்கு வழங்கியுள்ளார். அந்தப் புத்தகத்தில் பெரியார் ராமாயணத்தை எப்போது எரித்தார் என்பது போன்ற இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக தகவல்கள் உள்ளன.

மேலும், சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் தகவல்களும் அதில் உள்ளன. எனவே, புத்தகத்தைத் திரும்பப் பெறுவதுடன் அதை வழங்கிய தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அயோத்தி ராமஜென்ம பூமியின் வரலாறு என்ற புத்தகத்தை நாங்களும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் வழங்கி தேர்வு நடத்துவோம்" என்றார்.

பெரியார் 1000 புத்தகம்
பெரியார் 1000 புத்தகம்

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் ராமனிடம் பேசினோம், ``வினாடி வினா போட்டி என்றதும் தலைமை ஆசிரியர் தெரியாமல் அந்தப் புத்தகத்தை மாணவிக்கு வழங்கிவிட்டார். இப்போது அந்தப் புத்தகங்களைத் திரும்பப் பெற்றுவிட்டோம். இனி எந்தப் புத்தகம் வழங்கினாலும் எங்களிடம் சொல்லிவிட்டுக் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.