Published:Updated:

புதுக்கோட்டை: சிறுமி குடும்பத்துக்கு நிதியுதவி! -ஆறுதல் அளித்த விஜய் ரசிகர்கள்

நிதியுதவி
நிதியுதவி

புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் நேரடியாக ஏம்பல் கிராமத்திற்குச் சென்று சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு, ரூ.50,000 ரொக்கப்பணத்தை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரின் மகள் 7வயது சிறுமி. வீட்டின் அருகே பட்டாம்பூச்சி போல விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, திடீரென காணாமல் போகவே, பெற்றோர்கள் தெரிந்த இடங்களில் எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை. எப்படியும் இரவுக்குள் வீட்டிற்கு வந்துவிடுவாள் என்று காத்திருந்த பெற்றோர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. பதற்றத்தோடு ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூ வியாபாரி ராஜா, ஈவு இரக்கமே இல்லாமல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உடலில் முட்களைக் கொண்டு காயங்களை ஏற்படுத்தி முட்புதரில் தூக்கிவீசியது தெரியவந்தது.

புதுக்கோட்டை: சிறுமி குடும்பத்துக்கு நிதியுதவி! -ஆறுதல் அளித்த விஜய் ரசிகர்கள்

இதையடுத்து ராஜாவைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அதுவும் விரைவில் கிடைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், மகளிர் அமைப்புகள் இந்த சம்பவத்திற்குக் கண்டனங்களை எழுப்பினர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த முதலமைச்சர், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாகக் கூறி குடும்பத்திற்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.8.25 லட்சம் அறிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை 7 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! | NEED JUSTICE

தொடர்ந்து பலரும் தாமாக முன்வந்து சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் நேரடியாக ஏம்பல் கிராமத்திற்குச் சென்று சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு, 50,000 ரொக்கப்பணத்தை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பர்வேஸ் கூறும்போது, ``அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்றபோது அனைவரும் அவ்வளவு மன வேதனையிலிருந்தனர். அந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பேசியபோது, எங்களுக்கு இதயம் கனத்தது.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

எவ்வளவு நிதி கொடுத்தாலும் சிறுமியின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்பது நன்றாகவே தெரியும். ஆனாலும், ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் நிதி உதவ வேண்டும் என்று, எங்களால் முடிந்த நிதியைக் கொடுத்துவிட்டு வந்தோம். சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் போல இனி யாருக்கும் நடக்கக்கூடாது. இதுபோன்ற ஈவு, இரக்கம் இல்லாத கொடூரங்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.தொடர்ந்து, எங்களால் முடிந்த உதவிகளை அந்தக் குடும்பத்திற்குச் செய்வோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு