Published:Updated:

`20 கிருமி நாசினி இயந்திரங்கள்; மளிகைப் பொருள்கள்!' -தூய்மைப் பணியாளர்களை நெகிழவைத்த விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

கோவையில் கொரோனா தடுப்புப் பணியில் நடிகர் விஜய் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.

கொரோனா தடுப்புப் பணியில் அரசுடன் இணைந்து, பல்வேறு தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, அரசியல் கட்சிகளும் ஆங்காங்கே தங்களாலான பணிகளைச் செய்து வருகின்றனர். கோவையில் அரசுடன் பல்வேறு நல்ல உள்ளங்கள் இணைந்து, ஆதரவற்ற மக்களுக்கு உணவளிப்பது, கூலி தொழிலாளர்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்குவது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை சி.எம்.சி காலனி
கோவை சி.எம்.சி காலனி

ஆனால், களத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய உபகரணங்கள் வழங்குவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

முக்கியமாக, கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்பான வெரைட்டிஹால் சாலை சி.எம்.சி காலனி அடுக்குமாடிக் குடியிருப்பு சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், தற்போது கோவை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கொரோனா தடுப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

முதல் கட்டமாக, 100 கூலித்தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சி.எம்.சி காலனி தூய்மைப் பணியாளர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில் கிருமிநாசினியைத் தெளித்தனர். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்டப் பொறுப்பாளர் சம்பத்குமார், ``கூலித் தொழிலாளர்களுக்கு அடுத்து 10 நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் வாங்கித் தந்துள்ளோம்.

கிருமி நாசனி தெளிக்கும் விஜய் ரசிகர்கள்
கிருமி நாசனி தெளிக்கும் விஜய் ரசிகர்கள்

அதேபோல, மாவட்டம் முழுவதும் 20 பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களை வழங்கியுள்ளோம். அந்தந்தப் பகுதிகளில் எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ, அங்கெல்லாம் கிருமி நாசினி தெளிக்கச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

மக்களின் நலன்களைப் பாதுகாக்கப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்காக உதவிக் கரம் நீட்டிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு