Published:Updated:

`நடுத் தெருவில் நின்றேன்; சாப்பாட்டுக்கு கையேந்தினேன்! -ஊரடங்கில் சிக்கிய விஜய் மன்றத் தலைவி கண்ணீர்

விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணித் தலைவி
விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணித் தலைவி

'ரசிகர்களுக்கு எங்கேயாவது பிரச்னையாக இருந்தால் விஜய் ரசிகர்கள்தான் காப்பாற்றுவார்கள். என்னை அப்படித்தான் காப்பாற்றினார்கள்' என்றார்.

"ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பேருக்கு சாப்பாடு பரிமாறியிருக்கிறேன். ஆனால், ஒருவேளை சாப்பாட்டிற்காக எங்களது குடும்பமே நடுத் தெருவில் கையேந்தி நின்ற கொடுமை எங்களுக்கு நிகழ்ந்தது. பிச்சைக்காரர்களுக்கு கொடுத்த சாப்பாட்டை நாங்கள் சாப்பிட்டோம். பேருந்து நிலையத்தில் படுத்துத்தூங்கினோம்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

வேண்டுதலுக்காக கோயிலுக்கு வந்த எங்களை எந்த அரசாங்கமும், அதிகாரிகளும் மீட்கவில்லை. எங்கள் இளைய தளபதி விஜய் அண்ணனின் தீவிர ரசிகர்தான் எங்களை மீட்டார்" என்று ஊரடங்கு காலத்தில் குடும்பத்தோடு சிக்கி ஊர் திரும்பிய விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி, அவர் பட்ட கஷ்டங்களை விவரிக்கிறார். அப்படி என்னதான் நடந்தது?

ஊரடங்கில் மாட்டிக்கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவி
ஊரடங்கில் மாட்டிக்கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது அரசாங்கம். அவர்களின் கண்ணீர்க் கதைகளுக்கு இணையாக பக்கத்து மாவட்டத்தில் சிக்கிக்கொண்டு, சொந்த ஊருக்கு வர முடியாமல் தப்பிப்பிழைத்து வந்தவர்களின் கதை இன்னும் சோகத்தை ஏற்படுத்துகிறது. நடிகர் விஜய்-யின் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி உட்பட, அவரது குடும்பத்தினருக்கு சென்னையிலிருந்து திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றிருந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், சென்னை திரும்ப முடியாமல் சாப்பாடு தண்ணீர் கிடைக்காமல் 42 நாள்கள் பரிதவித்ததாகக் கேள்விப்பட்டோம்.

சொந்த ஊர் திரும்பிய நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணித் தலைவி தேவியிடம் பேசினோம். "நான்,, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. அம்மா உணவகத்தில் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறேன். கடந்த மார்ச் மாதம், என் மகள் ரம்யாவுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் நேர்த்திக்கடன் இருந்ததால் மார்ச் 23ம் தேதி, மகள் மற்றும் மருமகன் மாமியார் என எங்களது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றோம்.

விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணித் தலைவி தேவி
விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணித் தலைவி தேவி

கோயிலுக்குச் சென்ற அன்றே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் வேகவேகமாக பஸ் பிடித்து திருச்செந்தூர் பேருந்து நிலையம் வந்தோம். ஆனால், அங்கு பஸ் எதுவும் ஓடவில்லை. எங்களுடைய வாழ்க்கையே அந்த பஸ் ஸ்டாண்ட் ஓரத்தில் நகர்ந்தது. என்ன பண்றதுன்னு தெரியாமல், எங்க மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை குமாருக்கு போன் பண்ணி தகவலைச் சொல்லி, நாங்கள் சென்னைக்குத் திரும்ப ஏதாவது வழி இருக்கான்னு கேட்டேன். அப்படியே எனக்குக் கொடுக்கவேண்டிய பணம் இருந்தா அனுப்புங்கன்னு கேட்டேன். கொஞ்சம் நேரம் கழித்து அவரே போன் பண்ணி, என் நண்பர்கிட்ட பணம் கேட்டேன். யாரும் இந்த நேரத்துல இல்லைனு சொல்லி கைவிரிச்சிட்டார்.

கையிலிருந்த காச வச்சி செலவு பண்ணினோம். அடுத்தடுத்து லாக்டெளன் போட்டதால கையில காசு இல்லாம சாப்பாட்டுக்கே ரொம்ப சிரமப்பட்டோம். ஆதரவற்றோர் மற்றும் உடல் முடியாதவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டை எல்லாம் நாங்கள் வாங்கி சாப்பிட்டு நாள்களைக் கடத்தினோம். பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் படுத்திருந்தைப் பார்த்ததும் ஒரு அதிகாரி, நான் ஊருக்கு அனுப்ப வழி செய்கிறேன்னு சொல்லி திருச்செந்தூர் கோயில்ல தங்கவெச்சார். அது ஜெயில் மாதிரி இருந்துச்சு. வெளியே வர முடியல. தொடர்ந்து எங்களால புளியோதரை சாப்பிட முடியல.

தேவி குடும்பத்தினர்
தேவி குடும்பத்தினர்

அதைச் சாப்பிட்ட சிலருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. எங்க சொந்தக்கார பையன் இங்கு இருக்க பிடிக்காம எங்களை விட்டு ஓடிட்டான். அவனைத் தேடி அலைஞ்சு கண்டுபிடிச்சோம். இதற்கிடையில, எங்கள ஊருக்கு அனுப்புறேன்னு சொன்ன அதிகாரிகள் கடைசி வரைக்கும் வரவே இல்ல. திரும்ப நாங்க எல்லோரும் வெளியே வந்தோம். எங்களுடைய பரிதாப நிலையை பார்த்துட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள அ.தி.மு.க-வைச் சேர்ந்த பழக்கடைகாரரிடம் நிலவரத்தை எடுத்துச்சொன்னோம். அவர் என்னோட லாரிய எடுத்துட்டு வர்றேன். ஆனா,, அதிகாரிகளிடம் அனுமதி மட்டும் வாங்கிக் கொடுங்கன்னு சொன்னார். பெண் தாசில்தார் மேடத்திடம் எல்லாத்தையும் எடுத்துச்சொன்னேன். உங்களை எங்கேயும் அனுப்பமுடியாது.

இதுதான் எங்களுக்கு வேலையான்னு ரொம்ப கடுமையாக பேசினார். அவுங்க பேசினத பார்த்துட்டு எங்களுக்கு அழுகை வந்துடுச்சு. இதற்கிடையில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் புஸி ஆனந்த் பேசினார். `5 பேருக்கு அனுமதி கொடுப்பேன் என்று சொல்றாங்க. மாவட்டச்செயலாளரிடம் பேசிட்டு மீண்டும் வர்றேன்னு' சொன்னவர்தான் அதன்பிறகு அவர் கடைசிவரை பேசவே இல்லை.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

எங்களுக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சு. வேற வழியில்லாம நடந்ததே ஊருக்கு போயிடலாம்னு தோணிச்சு. கடைசியா கலெக்டர் காலில் போய் விழுந்துடலாம் என நினைச்சுக்கிட்டு இருந்தப்போதுதான், மத்திய சென்னை மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் போன் பண்ணினார். அவரை வீடியோ கால் பேசச் சொல்லி எங்களோட பரிதாப நிலையைப் பார்த்தார். `அண்ணே, இப்படி நடுத் தெருவில் அனாதையா நிற்கிறோம். நடந்தே கலெக்டர் ஆபீஸுக்கு போகப் போறோம்னு' சொல்லி அழ ஆரம்பிச்சுட்டேன். அவர் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பில்லா ஜெகன்கிட்ட பேசவெச்சார்.

புதுமண தம்பதியினர்
புதுமண தம்பதியினர்

அவரது உதவியாளர் பேசினார். பேசிய உடனே வேன் வந்தது. அதில் ஏற்றி அவருடைய திருமண மண்டபத்தில் கொண்டுபோய் தங்கவெச்சார். அங்க போன பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது. ஒரே நாள்ல யாருகிட்ட பேசினாருன்னு தெரியல, நாங்க ஊருக்கு போறதுக்கு பாஸ் ரெடி பண்ணிக்கொடுத்தார். அதோட, இரவு 11 மணியளவுல பரோட்டா சிக்கன்னு வாங்கிக்கொடுத்தார். நான் எத்தனையோ பேருக்கு சாப்பாடு போட்டிட்டிருக்கிறேன். ஆனா, 40 நாளா சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்ட எங்களுக்கு சாப்பாட்டோட அருமை அன்னைக்குத்தான் தெரிஞ்சது. கையில காசு வச்சிருக்கீங்கலான்னு கேட்டார்.

உதவி செய்த 
பில்லா ஜெகன்
உதவி செய்த பில்லா ஜெகன்

எங்களோட நிலைமையை பார்த்துட்டு அவரே ஒரு வேன் பிடிச்சுக் கொடுத்ததோடு, அதுக்கு உண்டான வாடகை 27,500 ரூபாயும், என் மகள், மருமகன் புதுமணத் தம்பதிகள் என்பதால் அவர்களுக்கு 5,000 ரூபாயும் கொடுத்து உதவி பண்ணி எங்களைப் பத்திரமா அனுப்பிவெச்சார். எங்களைக் காப்பாற்றியது அரசாங்கமோ, அதிகாரிகளோ இல்லை. எங்களது விஜய் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர்தான். என் உடம்பில் உயிர் இருக்கும் வரையிலும் அவருக்காக நான் கடமைப்பட்டிருக்கிறேன். விஜய் ரசிகர்களுக்கு எங்கேயாவது பிரச்னையாக இருந்தா, விஜய் ரசிகர்கள்தான் காப்பாற்றுவார்கள். என்னையும் அப்படித்தான் காப்பாற்றினார்கள்" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு