Published:Updated:

`என் புண்ணியமும் அதுதான்; சாபமும் அதுதான்!' - எஸ்.பி.ஜனநாதன் சிலைத்திறப்பு விழாவில் விஜய் சேதுபதி

சிலை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி
News
சிலை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி

``கம்யூனிஸத்தை செயல்களின் மூலமும், வாழ்க்கையின் மூலமும் வாழ்ந்து காட்டியவர் இயக்குநர் ஜனநாதன். கம்யூனிஸம், பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், அதைப் பின்பற்றி வாழும்போதுதான் அதன் மீது பிடிப்பு ஏற்படும்." - விஜய் சேதுபதி

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் 2021, மார்ச் மாதம் 14-ம் தேதி காலமானார். அவரின் நினைவைப் போற்றும் வகையில் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலைத்திறப்பு விழா சென்னை, அடையாறில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் `சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி' என்ற பெயரில் ஜனநாதன் குறித்த நினைவு மலர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது, ``கம்யூனிஸத்தை செயல்களின் மூலமும், வாழ்க்கையின் மூலமும் வாழ்ந்து காட்டியவர் இயக்குநர் ஜனநாதன். கம்யூனிஸம், பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், அதைப் பின்பற்றி வாழும்போதுதான் அதன் மீது பிடிப்பு ஏற்படும். படங்களில் வார்த்தைகளைப் பார்த்துப் பார்த்து விதைப்பார். ஆயிரம் வார்த்தைகளை 5 வார்த்தைகளில் அடக்குவார், நான் வசனங்களை வேகமாகப் பேசுவேன். அதனால் என்னிடம் `நடிக்கும்போது வார்த்தை தெளிவாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார் அவர். என் வாழ்வில் நான் செய்த புண்ணியம் அவரது கடைசி படத்தைத் தயாரித்தது; சாபம், அது அவரின் கடைசி படமாக அமைந்தது” என்றார்.

விழாவில்
விழாவில்

விடுதலைத் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ``திரைத்துறையில் தத்துவத்தைப் பேசுவது மிகவும் கடினமானது. கடினமான இடத்திலும் வெற்றிகரமாகத் தத்துவங்களைப் பேசியவர் ஜனநாதன். இன்னும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இந்திய அளவில் கம்யூனிஸம் குறித்த கருத்துகளைத் திரைப்படங்கள் மூலம் கொண்டு சென்றிருப்பார். தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் அதைத் திரைமொழியில் பேச அதிகம் அறிவாற்றல் வேண்டும். அந்தத் தத்துவத்தைப் பேசினார் ஜனநாதன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ``இயற்கை, புறம்போக்கு படங்களைப் பார்த்துவிட்டு நான் கண்ணீர் விட்டு அழுதுள்ளேன். எளிய முறையில் வாழ்ந்து காட்டியவர். `புறம்போக்கு' படம் தொடர்பாக ஜனநாதன், விஜய் சேதுபதியிடம் அமர்ந்து பேசும்போது இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்பவர்கள் எளிமையாக, சாதாரணமாக இருக்கிறார்களே என நினைத்துப் பெருமைப்பட்டேன். அரசியல்வாதிகள் பேசலாம், விமர்சிக்கலாம், போராடலாம். ஆனால், கருத்தியல்களை படம் மூலம் பேசியவர் ஜனநாதன். ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையை படங்களில் காட்டியவர் அவர். ஜனநாதனின் வாழ்க்கை அனைவருக்கும் பாடமாக வேண்டும்” என்றார்.

நல்லகண்ணு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர்
நல்லகண்ணு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர்

எஸ்.பி.ஜனநாதன் சிலையை அரசே பொது இடத்தில் வைக்க வேண்டும் எனக் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இயக்குநர்கள் அமீர், வ.கௌதமன், கரு.பழனியப்பன், சுசீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். காணொளி மூலம் பங்கேற்றார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் சங்கரய்யா.