Published:Updated:

வேறு சிந்தனைக்கு இடமில்லை! -நீண்ட நாள்களுக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

கடந்த 11-ம் தேதி நடந்த அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் இருந்தனர். ஆனால், கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பை தலைமைச்செயலாளர் சண்முகமே நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் அதிக துடிப்புடன் இயங்கியது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான். செய்தியாளர்கள் சந்திப்பின்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உடன் இருந்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து புள்ளி விவரங்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் பத்திரிகைகளுக்குத் தெரியப்படுத்திவந்தார். மருத்துவமனைகளில் ஆய்வு, செய்தியாளர்கள் சந்திப்பு எனப் பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தார் அமைச்சர்.

பீலா ராஜேஷ்- விஜயபாஸ்கர்
பீலா ராஜேஷ்- விஜயபாஸ்கர்

இதனால் பொதுமக்கள் மத்தியில் அமைச்சருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்கள் அமைச்சர் விஜயபாஸ்கரை சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பார்க்க முடியவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தான் நடத்தினார். அமைச்சரோ சொந்தத் தொகுதியில் கட்சிப்பணிகளிலும் கொரோனா நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

அதன்பின், கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் நடத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருடனான ஆலோசனைக்கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றுவருகிறார். மருத்துவமனையைப் பார்வையிடுவது என வழக்கமான பணிகளில் அமைச்சர் ஈடுபட்டு வருகிறார். மாநில முதல்வர்களுடனான பிரதமரின் ஆலோசனையின்போதும் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்
எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்

கடந்த 11-ம் தேதி நடந்த அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் இருந்தனர். ஆனால், கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பை தலைமைச் செயலாளர் சண்முகமே நடத்தினார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவருடன் வந்து சென்றார். இந்தச் சந்திப்பின்போது, `பீலா ராஜேஷ் ஏன் தற்போது பதிலளிப்பதில்லை. அவர் ஓரங்கப்படுகிறாரா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இது சர்ச்சையாக மாற, மறுநாளே பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். எனினும்அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு என்பது நடைபெறாமலே இருந்தது.

இதற்கிடையே, தமிழகத்தைக் காக்கும் போதிதர்மன் என்று `ஏழாம் அறிவு' படத்திலிருந்து ஒரு காட்சியை, இரண்டு நிமிட மீம்ஸ் வீடியோவாக வெளியிடவே, அது சர்ச்சையாக மாறி அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வர் எடப்பாடி ஓரம்கட்டிவிட்டார் என்று கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில், இன்றைய கொரோனா குறித்த விவரங்களைத் தருவதற்கு திடீரென அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவருடன் பீலா ராஜேஷும் உடனிருந்தார். அப்போது பேசிய விஜயபாஸ்கர், ``தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,739 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்துக்கும் அதிகம். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், 118 பேர் இதுவரை நம் மாநிலத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

வீட்டுக் கண்காணிப்பில் 28,711 பேரும் அரசு முகாமில் 135-க்கு அதிகமானவர்களும் இருக்கிறார்கள். 68,519 பேருக்கு 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. இறப்பு விகிதம் 1.1 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. 1.50 லட்சம் நோயாளிகளைக் குணப்படுத்தும் அளவுக்கு மருந்துகள் நம்மிடம் உள்ளன. தமிழகத்தில் 22 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. எனினும், தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று இல்லாத நிலையில், உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனை நிர்வாகங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடர்ந்து பேசி, என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்திவருகிறது. தமிழகத்தில், பொது சுகாதாரத்துறை வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது; இந்தியாவிலே பொது சுகாதாரம் வலுவான மாநிலம் தமிழகம் தான். இந்தியாவிலேயே தமிழகத்தின்தான் அதிகமான சோதனை ஆய்வகங்கள் உள்ளன. இருந்தும், மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 30% மானியத்தைக்கூட தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சார்ந்த நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க முன்வர வேண்டும். முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகள், முன்னேற்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது" என்றார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

அப்போது, இத்தனை நாள்களாக செய்தியாளர்களைச் சந்திக்கவில்லையே ஏன் என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``நேற்றுக்கூட நான் செய்தியாளர்களைச் சந்தித்தேன். அதற்கு முன்தினமும் சந்தித்தேன். முதல்வர் உத்தரவுப்படி அமைச்சர் என்ற முறையில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்குச் செல்வது, மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்வது மாதிரியான பணிகளில் கவனம் செலுத்திவந்தேன். அதிகாரபூர்வ தகவல்களை அரசு செயலாளர் வழங்குகிறார். தேவைப்பட்டால் தலைமைச் செயலாளர் வழங்குகிறார். முதல்வரும் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். இதில் வேறு எந்த சிந்தனைக்கும் இடமில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு