Published:Updated:

`பா.ம.க-வுக்கு மட்டும் முக்கியத்துவம்!' - பழைய கோபத்தைக் காட்டும் தே.மு.தி.க?

 விஜயகாந்த்
விஜயகாந்த்

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க நீடிக்குமா என்கிற சந்தேகம் கொஞ்ச நாள்களாக எழத்தொடங்கியுள்ளது. ராஜ்ய சபா சீட் விவகாரத்திலிருந்தே பிரச்னை வரத் தொடங்கிவிட்டது.

`கொரோனா விவகாரத்தில் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மெத்தனமாக இருந்துவிடாதீர்கள்' எனத் தே.மு.தி.க வெளியிட்டிருக்கும் அறிக்கை விவாதப் பொருளாகியுள்ளது.

அ.தி.மு.க
அ.தி.மு.க

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வரும் நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களும் இணைந்துள்ளன.

இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த இன்று மாலை மீண்டும் மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். `கொரோனாவைக் கட்டுப்படுத்த இறைவனால்தான் முடியும்’ என முதல்வர் தரப்பில் சொல்ல, அதற்கு எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். அந்த வகையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க-வும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளது.

Vikatan

விஜயகாந்த், தனது அறிக்கையில்,`கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது மட்டும் ஒரு தீர்வாகாது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வியூகங்களை அமைத்து வீடு வீடாகச் சென்று பல்வேறு முயற்சிகள் எடுப்பதைப் போன்று, தற்போது கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை நடத்த வேண்டும். ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுரக் குடிநீர் உள்ளிட்ட `ப்ரோபைலக்டிக்’ மருந்துகள் வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும், `நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வீடு வீடாகச் சென்று மருந்து வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது எனத் தமிழக அரசால் சொல்ல முடியாது. ஏனெனில், ஆயுஷ் திட்டத்தின் மூலம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதைப் பயன்படுத்துங்கள். ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபடுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

`கொரோனா தொற்று; சாலைக்கு நடுவே குழி!’ - தஞ்சை கிராம சாதிபாகுபாடு சர்ச்சை

இந்த அறிக்கை தொடர்பாக நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகி ஒருவர், `` அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க நீடிக்குமா என்கிற சந்தேகம் கொஞ்ச நாள்களாக எழத்தொடங்கியுள்ளது. ராஜ்ய சபா சீட் விவகாரத்திலிருந்தே பிரச்னை வரத் தொடங்கிவிட்டது. பின்பு, அ.தி.மு.க-வில் நால்வர் அணியில் உள்ள ஒருவர் மூலமாகத் தே.மு.தி.க தலைமையிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது, `உங்களுடைய பிரச்னை என்னவென்று எங்களிடம் சொல்லுங்கள்' எனக் கூறிவிட்டுச் சென்றார். இன்றுவரையிலும் ஆளும்கட்சி தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை. மேலும், பா.ம.க-வுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட நமக்கு இல்லை என்ற வருத்தம் நீண்டகாலமாகத் தே.மு.தி.க-வுக்கு இருக்கிறது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அறிக்கையில் வெளிவரத் தொடங்கியிருக்கிறது" என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு