Published:Updated:

`குடை எடுத்துட்டுப்போனால் கொரோனா பரவலைத் தடுக்கலாம்..!’ - திருப்பூர் ஆட்சியரின் #UmbrellaChallenge

UmbrellaChallenge
News
UmbrellaChallenge

``அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்லும்போது ஒரு குடை எடுத்துச் சென்றால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதனால், நோய் பரவுவதும் குறையும்” - ஆட்சியர் விஜய கார்த்திகேயன்.

உலகளவில் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களைச் பாதித்துள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்த மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் தனிமனித விலகல் ஒன்றே தீர்வாகச் சொல்லப்படுகிறது. இதனால், இந்தியா உட்பட பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருந்து வருகின்றன. எனினும், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக சந்தைகள், கடைகள் போன்றவற்றில் கூட்டமாகக் கூடி வருகின்றனர். இதனால் தனிமனித விலகல் என்பது பாதிப்படைகிறது. இதைத் தடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அம்மாவட்டத்தில் `UmbrellaChallenge’ என்ற விழிப்புணர்வு சவாலை அறிமுகப்படுத்தியுள்ளார்.

UmbrellaChallenge
UmbrellaChallenge

`UmbrellaChallenge’ என்றால் என்ன?

அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் குடைகளைப் பிடித்திருப்பதால் ஒருவர் மற்றொருவருடன் நெருங்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். இதன்மூலம் தனிமனித விலகல் என்பது கடைப்பிடிக்கப்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த UmbrellaChallenge.

கொரோனா வைரஸூக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த UmbrellaChallenge-ஐ ஏற்று தனிமனித விலகலுடன் நிற்கும் புகைப்படம் ஒன்றையும் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆட்சியர் விஜயகார்த்திகேயன் `UmbrellaChallenge’ தொடர்பாகப் பேசுகையில், ``கொரோனா தொற்றுநோய் தடுப்பில் சமூக விலகல் எவ்வளவு முக்கியம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தச் சமூக விலகலை சில நேரம் நம்மால் கடைப்பிடிக்க முடிகிறது. சில நேரங்களில் கடைப்பிடிக்க முடியவில்லை. இதை முழுமையாகக் கடைப்பிடிக்க மற்ற நாடுகளில் சில முயற்சிகளை எடுத்துள்ளனர்.

அது என்னவென்றால், குடை எடுத்துச் செல்வதுதான். விரிந்த நிலையில் குடையை எடுத்துச் செல்லும்போது அருகில் இருப்பவர்களுக்கும் நமக்கும் இடைவெளி ஏற்படுகிறது. இந்த முயற்சி நல்லதாக இருந்தது. நாமும் இதைப் பயன்படுத்தலாம் எனத் தோன்றியது. எனவே, அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்லும்போது ஒரு குடை எடுத்துச் சென்றால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதனால், நோய் பரவுவதும் குறையும். இந்தச் சவாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

#umbrella☂️ Idea ! நாமும் குடை பிடிப்போமா ! #SocialDistancing #IndiaFightsCorona #UmbrellaChallenge

Posted by Vijayakarthikeyan K on Monday, April 27, 2020

திருப்பூரில் ஏற்கெனவே சந்தைக்கு முன்பகுதியில் கிருமிநாசினி சுரங்கம் ஒன்றை தனியார் அமைப்புடன் இணைந்து அமைத்து பலரது பாராட்டுக்களையும் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பெற்றார். இந்நிலையில், இந்த Umbrella challege-ம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கெனவே இதைப் பின்பற்ற தொடங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.