Published:Updated:

`2011 உலகக்கோப்பை.. யுபிஎஸ்சி நேர்காணல்.. கொரோனா!’ -அஷ்வின், திருப்பூர் ஆட்சியரின் `லைவ்’ உரையாடல்

கிரிக்கெட் வீரர் அஷ்வின் மற்றும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன்
கிரிக்கெட் வீரர் அஷ்வின் மற்றும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

``மக்களுடன் தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியமானது. அரசு கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவதும் அவசியம்.வதந்திகள் குறித்தோ பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோ மக்கள் அச்சப்பட தேவையில்லை”

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 2,526 பேர் பாதிப்படைந்துள்ளனர். எனினும், சென்னையை தவிர்த்து பல மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கிருமி நாசினி சுரங்கம், சமூக விலகலைக் கடைபிடிக்க ``UmbrellaChallenge” என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிலையில், இன்று ஆட்சியர் விஜயகார்த்திகேயன் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் கொரோனா வைரஸ், கிரிக்கெட் என பல விஷயங்களைப் பற்றி இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார்.

கிரிக்கெட் வீரர் அஷ்வின் மற்றும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன்
கிரிக்கெட் வீரர் அஷ்வின் மற்றும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அஷ்வினின் கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர் விஜயகார்த்திகேயன், ``வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களின் விபரங்களை சேகரித்து அவர்களுக்கு பரிசோதனை நடத்தி தனிமைபடுத்துதலில் வைப்போம். திருப்பூரில் பயண வரலாறு உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை நடத்தி முடிவுகளும் வந்துவிட்டன. அதன்பிறகு மேப்பிங் செய்வோம். அதனை வைத்து கட்டுப்பாட்டு பகுதிகளை உருவாக்குவோம். இந்த நடவடிக்கைகளை முறையாக செய்யும் பட்சத்தில் சமூக பரவலை எளிதாக தடுக்க முடியும். கட்டுப்பாட்டு பகுதிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கைகளை எடுப்போம். மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கும் அறிகுறிகள் இருக்கிறதா என கண்காணிப்போம். இதுதான் அடிப்படை. இந்த நேரத்தில் அதிகமான முகக்கவசங்கள் தேவைப்படுகின்றன. திருப்பூரில் உள்ள சில தொழிற்சாலைகளை தொடர்புகொண்டு முகக்கவசங்களைத் தயாரிக்கிறோம். கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் இங்கிருந்து முகக்கவசங்கள் அனுப்பப்படுகிறது” என்றார்.

`குடை எடுத்துட்டுப்போனால் கொரோனா பரவலைத் தடுக்கலாம்..!’ - திருப்பூர் ஆட்சியரின் #UmbrellaChallenge

தொடர்ந்து அஷ்வினி கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ``மக்களுடன் தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியமானது. அரசு கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவதும் அவசியம். நாட்டில் கொரோனா பரவுவதைவிட கொரோனா தொடர்பான வதந்திகள் வாட்ஸ் அப்பில் அதிகமாக பரவுகிறது. இந்த வதந்திகள் குறித்தோ பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோ மக்கள் அச்சப்பட தேவையில்லை. டெங்கு, மலேரியா, சிக்கன் பாக்ஸ் என பல நோய்களை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நோய்கள் மீண்டும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதனைப் புரிந்துகொண்டால் போதுமானது. லாக் டவுன் முடிந்த பிறகு அன்றாட வாழ்க்கையில் பல மாறுதல்கள் இருக்கும். ஆனால், சமூக விலகல், கை கழுவுதல், எச்சில் துப்பாமல் இருப்பது என அனைத்துமே கொரோனா முடிந்த பிறகும் கடைபிடிப்பது நல்ல விஷயங்கள்தான். இந்த சூழலில் வேலைகள் இழப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். ஆனால், வேறு வழிகள் திறக்கும். ஒருகட்டத்தில் அனைத்துமே சாதாரண சூழலுக்கு மாறும். அதுவரை சவாலாகதான் இருக்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

கொரோனா யுத்தம்
கொரோனா யுத்தம்

கிரிக்கெட் தொடர்பான கேள்விக்க பதிலளித்த ஆட்சியர், ``1992 உலகக்கோப்பையில் இருந்து கிரிக்கெட்டை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி உலகக்கோப்பை போட்டி நடந்தது. ஏப்ரல் 9-ம் தேதி யு.பி.எஸ்.சி-க்கான எனது நேர்காணல் தேர்வுகளும் இருந்தன. தீவிரமாக நேர்காணலுக்கு தயாராகிக்கொண்டிருந்த அந்த சமயத்தில் கிரிக்கெட் பார்க்கவும் தவறவில்லை. பாஸிட்டிவான எனர்ஜி அதில் கிடைத்தது. கிரிக்கெட் பிடிக்கும் என நேர்காணலில் குறிப்பிட்டதால் உலகக்கோப்பை தொடர்பான கேள்விகளும் இருந்தன. 20 நிமிடங்கள் நடந்த நேர்காணலில் 3 நிமிடங்கள் கிரிக்கெட் பற்றி பேசினோம். இப்போது ஐ.ஏ.எஸ் கிரிக்கெட் அணியிலும் விளையாடி வருகிறேன்” என தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அஷ்வின் `Reminisce with Ash' தலைப்பின் கீழ் ஒவ்வொரு வாரமும் அவர் விளையாடிய போட்டிகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார். இந்த உரையாடலில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி போட்டிகள் குறித்தும் அதில் விளையாடிய அனுபவங்கள் மற்றும் மறக்க முடியாத சம்பவங்கள் குறித்தும் அஷ்வின் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

`ஐ.பி.எஸ் அணியை வீழ்த்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!' - கூட்டணியில் கலக்கிய பவன், விஜய கார்த்திகேயன் ஜோடி
அடுத்த கட்டுரைக்கு