Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: `பசிக்கொடுமை; கையேந்திய வடமாநில குழந்தைகள்!’ - நெகிழ வைத்த உதவி

நிவாரணப் பொருள்கள்
நிவாரணப் பொருள்கள்

பசியால் வாடிய வடமாநிலத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு `விகடன்’ மூலமாக 3 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திரும்பும் பக்கமெல்லாம் பசிக்கொடுமை. இறுகப்பிடித்த வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு பிள்ளைகளின் பசியைப் போக்குவதற்காகப் போராடும் பெற்றோர். கண்ணீர் தோய்ந்த முகத்துடன் வீதியில் கையேந்தும் குழந்தைகள் என்று வறுமையின் விதையை இம்மண்ணில் வேரூன்ற விதைத்திருக்கிறது கொரோனா. இப்படி வறுமையில் வாடும் மக்களுக்கு வாசகர்களின் பேராதரவுடன் துயர் துடைத்துவருகிறது `விகடன்.’

நிவாரணப் பொருள்கள்
நிவாரணப் பொருள்கள்

அந்த வகையில், வேலூரிலும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது விகடன். வேலூர் மற்றும் காட்பாடிப் பகுதிகளில் தங்கியிருந்த வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில், பாய் பெட்ஷீட் விற்பது போன்ற தொழில்களைச் செய்துவந்த அந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவுக்கே வழியின்றித் தவித்து வருகிறார்கள். பொது முடக்கம் காரணமாக அவர்களால் எங்கும் நகரவும் முடியவில்லை.

இதனால், தங்களின் குழந்தைகளை மாநகருக்குள் அனுப்பி யாசகம் பெற்று அதில் கிடைக்கும் சொற்ப சில்லறையில் பசியைப் போக்கிக்கொள்கிறார்கள். உண்மை நிலையை அறியச் சிறுவர், சிறுமியரைப் பின்தொடர்ந்து சென்றோம். அவர்கள் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகம் எதிரே இருக்கும் வைபவ் கூட்டுறவு நகருக்குள் சென்றனர். அந்தப் பகுதி முழுவதிலும் பெரிய பெரிய அடுக்குமாடி வீடுகள் இருந்தன.

நிவாரணப் பொருள்கள்
நிவாரணப் பொருள்கள்

அதற்கு நடுவில் இருந்த காலி இடத்தில் குருவி கூடுகளைப் போன்று ஏராளமான `டென்ட்’ கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. நிறைய பேர் சொந்த மாநிலம் சென்றுவிட 15 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 41 பேர் அங்கு இருந்தனர். அவர்களைச் சந்தித்தோம். ``நாங்க ராஜஸ்தான்காரங்க. பிழைப்பு தேடி இங்கு வந்தோம். லாக்டௌன் காரணமா சாப்பிடக்கூட வழியில்ல. பிச்சைதான் எடுக்கிறோம்’’ என்றனர் வறுமை தொண்டை அடைக்க.

உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய `விகடன்’ களமிறங்கியது. வாசகர்கள் பங்களிப்புடன் விகடன் குழுமம் உருவாக்கியிருக்கும் கொரோனா நிவாரண நிதியிலிருந்து, வாசன் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக அந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான கோதுமை மாவு, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை, கடுகு, மஞ்சள் தூள், சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருள்களும், தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளையும் நேரில் சென்று வழங்கினோம்.

விகடன் மூலமாக உதவி
விகடன் மூலமாக உதவி

இந்த மளிகைப் பொருள்கள் அனைத்தும் அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு கொடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றி அனைவரும் நிவாரணப் பொருள்களைப் பெற்றுக்கொண்டனர். ‘‘இந்த 5 மாதங்களில், அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ யாருமே எங்களைக் கண்டுகொள்ளவில்லை. இதுவரை எந்த உதவியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. `விகடன்’ செய்த இந்தப் பேருதவியை மறக்க மாட்டோம்’’ என்றனர் மலர்ந்த முகத்துடன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு