
ஊரடங்கின் முதலாம் கட்டத்தில் தொடங்கிய விகடனின் இந்த அறப்பணி தற்போது நான்காம் கட்டத்திலும் வாசகர்கள் பங்களிப்போடு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
70 நாள்களைக் கடந்து ஊரடங்கு நீடித்துக்கொண்டிருக்கிறது. நோயின் அச்சம் கடந்து, வாழக்கை குறித்த அச்சம் பரவ ஆரம்பித்திருக்கிறது.
நோயோடு வாழ எத்தனித்த மக்களுக்குத் தங்கள் குடும்பமும் குழந்தைகளும் பசியோடு வாழ்வதைக் கடக்கும் வழி கிட்டவில்லை. கூலித்தொழிலாளர்கள், நாடோடிகள்,பழங்குடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் பெரும் துயரைச் சந்தித்துவருகின்றனர். ரேஷன் கார்டுகள் கூட கிடையாது என்பதால் அரசு அறிவிக்கும் திட்டங்களும், உதவிகளும் பலரைச் சென்றடைவதில்லை.

அவர்களை அரவணைத்து உடன்நிற்க வாசகர்களின் கரம்பற்றிக் களமிறங்கியிருக்கிறது விகடன்.
சென்னை, மதுரவாயல் ஏரிக்கரை சாலைப்பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட புலம்பெயர்த் தொழிலாளர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் சலூன்களில் தினக்கூலி அடிப்படையில் வேலைசெய்து வந்தனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக உணவகங்களில் பார்சல் உணவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் ஹோட்டல் உரிமையாளர்கள் பலரும் செலவீனங்களைக் குறைக்கும் நடவடிக்கையாகப் புலம்பெயர்த் தொழிலாளர்கள் பலரை வேலையிலிருந்து நீக்கியுள்ளனர்.

பெரும்பாலான புலம்பெயர்த் தொழிலாளர்கள் பிஹார்,தெலங்கானா, ஒடிசா என அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 56 புலம்பெயர்த் தொழிலாளர் குடும்பங்கள் மட்டும் நிதி நெருக்கடியின் காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பரிதவித்து வந்தனர்.
நாள் முழுவதும் உழைக்கும் இவர்களின் அதிகபட்ச தினக்கூலி 300 ரூபாய்தான். தங்களின் மாத வருமானத்தில் 75 சதவிகிதத்தைச் சொந்த ஊரில் இருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு மீதமுள்ள தொகையில் வாடகைச் செலுத்திவிட்டு நாள்களை நகர்த்தி வந்தவர்கள், இந்த ஊரடங்கின் காரணமாக தற்போது உணவுக்கே திண்டாடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வேலைகளை இழந்துவிட்டு வீட்டு வாடகைகூட செலுத்த முடியாமல் பரிதவிக்கும் இந்தப் புலம்பெயர்த் தொழிலாளர்களின் சமீபகால உணவு கோதுமைக் கஞ்சியும், வாழைப்பழமும்தான்.

இத்தகைய சூழலில் அந்த 56 குடும்பங்களுக்கும் வாசகர்கள் பங்களிப்போடு விகடன் குழுமம் 33,831 ரூபாய் செலவில் 2 மாதத்திற்குத் தேவையான அரிசி, கோதுமை மாவு, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட, ஒரு மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்களை வழங்கியது.
ஊரடங்கின் முதலாம் கட்டத்தில் தொடங்கிய விகடனின் இந்த அறப்பணி தற்போது நான்காம் கட்டத்திலும் வாசகர்கள் பங்களிப்போடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எளியவர்களை அடையாளம் கண்டு உதவும் விகடனின் அறப்பணி தொடரும்!
பேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.
நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.
நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரை தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.
வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - ஆசிரியர்
குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், `நிலம் நீர் நீதி’ மற்றும் `கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை `வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.