ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்த ஆந்திரக் கூலித் தொழிலாளர்கள்! - களத்தில் இறங்கிய விகடன்
சென்னை ஆவடியை அடுத்த பாலவேடு பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல் மிகுந்த நெருக்கடியில் இருப்பது தெரியவந்தது.
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் இந்தியாவில் கடந்த சில வார காலமாகத் தீவிரம் அடைந்து வருகிறது. நோய்த் தொற்றின் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை நடைமுறைப் படுத்தி வருகின்றன. ஆனால், மக்கள் உயிர் காக்க அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கினால் லட்சக்கணக்கான தினக் கூலிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
வருமானமின்றி வீட்டில் தவிக்கும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல நிவாரண திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் போதிலும், அரசுகளின் திட்டங்கள் சமூகத்தின் அடித்தட்டில் வசிக்கும் பழங்குடிகள், நாடோடிகள் மற்றும் தினக்கூலிகளை முழுமையாகச் சென்றடையவில்லை. காரணம், இந்த மக்கள் பெரும்பாலானோருக்கு ரேஷன் கார்டுகள்கூட கிடையாது.
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை அடையாளம் கண்டு வாசகர்கள் பங்களிப்போடு விகடன் உதவிகள் செய்துவருகிறது. அந்த வகையில், சென்னை ஆவடியை அடுத்த பாலவேடு பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல் மிகுந்த நெருக்கடியில் இருப்பது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் விஜய நகர் பகுதியிலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கட்டடத் தொழில் செய்வதற்காக வந்து இந்தக் கிராமத்தில் ஓலைக் கொட்டகைகளில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
இங்கு வசித்த 110 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு, சர்க்கரை உட்பட 1,77,210 ரூபாய் மதிப்பில் இரண்டு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் முறையாக சமூக விலகலைக் கடைப்பிடித்து விகடன் குழுவால் வழங்கப்பட்டது.
``நாங்க எல்லாருமே ஆந்திரா, விஜய நகர் பகுதியில இருந்து இங்க வந்து தங்கி சித்தாள் வேலை செய்றோம். தினமும் காலைல ஆவடி பஸ் ஸ்டாண்டுக்கு எல்லாரும் போயிடுவோம். அங்க மேஸ்திரிங்க சில பேரு இருப்பாங்க. அவங்கதான் எங்களையெல்லாம் பிரிச்சு பஸ்ல அனுப்புவாங்க. கிடைக்குற கூலில மேஸ்திரிங்க கமிஷன எடுத்துக்கிட்டு வாரக் கடைசில எங்களுக்குத் தருவாங்க. அதிகபட்சம் 250 ரூபாய் கூலி கிடைக்கும். அத வெச்சு தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கோம்.
இந்த நிலைமையில ஊரடங்கு போட்ருக்காங்க. வேலையில்லாம உணவுக்குத் திண்டாடிக்கிட்டு இருக்குறோம். எங்களுக்கு வேலை கொடுக்குற மேஸ்திரிங்ககூட கைவிட்டுட்டு அவங்கவங்க ஊருக்குப் போயிட்டாங்க. எங்களுக்கு இங்க வேற யாரையும் தெரியாது. குழந்தைங்க பசியில அழுதுகிட்டே இருக்குதுங்க.
இந்த நிலையில எங்களுக்கு ரெண்டு மாசத்துக்கான சமையல் மளிகைப் பொருள் கிடைக்கும்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்கல... ஊரடங்கு எப்ப முடியும்னு தெரியல... ஆனா, இந்த மளிகைப் பொருள வெச்சு எப்படியும் ரெண்டு மாசம் நகர்த்த முடியும்னு நம்பிக்கை வந்துருக்கு... ரொம்ப நன்றி சார்" என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்.
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் இவர்களைப் போன்றவர்களைக் கண்டறிந்து உதவும் விகடனின் இந்த அறப்பணி தொடரும்.
பேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.
நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.
நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.
வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - ஆசிரியர்
குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், `நிலம் நீர் நீதி’ மற்றும் `கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை `வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.