Published:Updated:

மூளை நரம்பு நோயால் அவதிப்பட்ட பெண்.. மனிதநேயத்துடன் செயல்பட்ட அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள்

எமர்ஜென்சி பர்மிட் ஒட்டப்பட்ட கார்
எமர்ஜென்சி பர்மிட் ஒட்டப்பட்ட கார்

கொரோனா தொற்று, இஸ்லாமியர்களால்தான் பரவுறதா ஒரு வேதனையான வதந்தி பரவிக்கிடக்குது. இந்தச் சமயத்துல, இந்தப் பெண்மணி, மாநிலம் விட்டு மாநிலம் போயி சிகிச்சைப் பெறுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல.

கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், மக்கள் தங்களது அவசரத் தேவைகளுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதில் பெரும் நெருக்கடி நிலவி வருகிறது. குறிப்பாக கிராமப்புற மக்கள், மருத்துவ சிகிச்சைகளுக்கு, வெளி மாவட்டங்களுக்குச் செல்ல முடியாமல் பலர் தவித்து வருகிறார்கள். அதுவும் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லை கடும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

மேலத்திருப்பூந்துருத்தி
மேலத்திருப்பூந்துருத்தி

இந்நிலையில்தான், தஞ்சை மாவட்டம் மேலத்திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த, மூளைநரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இஸ்லாமிய பெண்மணி, பாண்டிச்சேரி செல்ல, விகடன் செய்த முயற்சிக்கும், இதில் சகோதரத்துவத்துடன் பங்களிப்பு செய்த சமூக ஆர்வலர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நெகிழ்ச்சியான பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, மத நல்லிணக்கத்துக்கும், மனிதநேயத்துக்கும் இது ஒரு மிகச் சிறந்த வழிகாட்டுதல் என நெகிழ்கிறார்கள்.

தஞ்சை மாவட்டம் மேலத்திருப்பூந்துருத்தி, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. இங்கு வசிக்கும் மெஹராஜ்கனி என்ற பெண்மணி மூளை நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அவ்வப்போது பாண்டிச்சேரி சென்று, அங்குள்ள பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். கடந்த சில நாள்களாக, இவருக்கு திடீரென பாதிப்பு தீவிரமானது. உடனடியாக பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவானது. ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், நெருக்கடியான நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஜீவக்குமார் மற்றும் மேலத்திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர், இந்த தகவலை நமது கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

மூளை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்மணி, சிகிச்சைக்காக, மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டியிருப்பதால் பயண அனுமதி பெற முடியாமல் சிரமப்படுகிறார் எனவும், ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது எனவும் சரவணன் நம்மிடம் தெரிவித்தார். அந்தப் பெண்மணியின் வேதனையான சூழலை, தஞ்சை மண்டல கொரோனா தடுப்புக் கண்காணிப்பு அதிகாரியான எம்.எஸ். சண்முகம் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று விகடன் வேண்டுகோள் வைத்தது.

உடனடியாக தஞ்சை மாவட்ட நிர்வாகம் மனிதநேய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. எமர்ஜென்சி வாகன பர்மிட் கொடுத்ததோடு, மூளை நரம்பால் பாதிக்கப்பட்ட பெண்மணி மற்றும் அவருடன் பயணம் செய்ய வேண்டிய அவரின் மகள், கார் ஓட்டுநர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்து, இத்தகைய பாதிப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை சார்பில் சான்றிதழும் கொடுக்கப்பட்டது. இதனால் மெஹராஜ்கனி, எந்தச் சிரமும் இல்லாமல், பாண்டிச்சேரி சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.

வழக்கறிஞர் ஜீவக்குமார்
வழக்கறிஞர் ஜீவக்குமார்

இதுகுறித்து நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேசிய மெஹராஜ்கனி ``விகடன் செஞ்ச உதவியை என்னைக்கும் மறக்கமாட்டோம். ரொம்ப நன்றி. அவசரமான நேரத்துல உதவியிருக்கீங்க“ என்றார்.

இவரது ஊர்க்காரரான சரவணன், ``எமர்ஜென்சி வாகன பர்மிட் இருந்ததுனாலதான், பயணத்துல எந்தச் சிரமமும் இவங்களுக்கு ஏற்படல. கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் இருந்ததுனாலதான், பாண்டிச்சேரி பிம்ஸ்ல இவங்களை அனுமதிச்சு, சிகிச்சை கொடுத்திருக்காங்க. இது மிகப்பெரிய உதவி. எங்க ஊர்க்காரங்க சார்பாக நாங்களும் நன்றி தெரிவிச்சிக்கிறோம்” என்றார்.

இந்தச் சம்பவத்தில் மனிதநேயம் மட்டுமல்ல, மத நல்லிணக்கமும் ஒருங்கிணைந்திருப்பதாக மிகுந்த நெகிழ்ச்சியோடு தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட சமூக ஆர்வலர் ஜீவக்குமார் ``மேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமியர்கள் நிறைஞ்ச பகுதி. கொரோனா தொற்று, இஸ்லாமியர்களால்தான் பரவுறதா ஒரு வேதனையான வதந்தி பரவிக்கிடக்குது.

இந்தச் சமயத்துல, இந்தப் பெண்மணி, மாநிலம் விட்டும் மாநிலம் போயி சிகிச்சைப் பெறுவதென்பது, அத்தனை எளிதான காரியமல்ல. ரொம்பவே சிரமப்பட்டாங்க. இவங்க பாண்டிச்சேரி போயி, சிகிச்சைப் பெற உதவி செஞ்ச, நான், சரவணன், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட எல்லாருமே வேற்று மதத்தைச் சேர்ந்தவங்க. இது மத நல்லிணக்கத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் இது மிகப்பெரிய தூண்டுகோள்” எனத் தெரிவித்தார். பல தரப்பிலிருந்தும் இதற்கு நெகிழ்ச்சியான பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழ் மண்ணின் மனிதநேயம், மதம் கடந்து எப்பொழுது உயிர்த்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு