Published:Updated:

விகடன் புகைப்படக் கலைஞர் விஜயகுமார் கொரோனா தொற்றால் மரணம்!

விஜயகுமார்
விஜயகுமார்

புகைப்பட இதழியலில் நீண்ட அனுபவம் கொண்ட விஜயகுமார், விளிம்புநிலை மனிதர்கள், பழங்குடிகள், எளிய தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து பல புகைப்படக் கட்டுரைகளை வெளியிட்டு அவர்களின் பிரச்னைகள் தீர உதவியிருக்கிறார்.

விகடன் குழும சேலம் புகைப்படக் கலைஞர் விஜயகுமார் கொரோனா தொற்று காரணமாக சற்றுமுன் காலமானார். 2009 முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றிவரும் விஜயகுமார், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், பசுமை விகடன் உள்பட விகடன் குழுமத்தின் அனைத்து அங்கங்களிலும் பெரும் பங்களிப்பு செய்தவர்.

கடந்த 16ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சேலம் மகளிர் கல்லூரியில் செயல்படும் சித்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுவந்தார் விஜயகுமார். புதன்கிழமையன்று உடல்நிலை மோசமடைய, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று இரவு எட்டரை மணிக்கு காலமானார்.

புகைப்பட இதழியலில் நீண்ட அனுபவம் கொண்ட விஜயகுமார், விளிம்புநிலை மனிதர்கள், பழங்குடிகள், எளிய தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து பல புகைப்படக் கட்டுரைகளை வெளியிட்டு அவர்களின் பிரச்னைகள் தீர உதவியிருக்கிறார். அவரின் படைப்புகள் முகமறியாத பல எளிய மனிதர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

விஜயகுமார்
விஜயகுமார்

“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது."

இப்படித்தான் தன் விகடன் பக்கத்தின் முகப்பில் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார் விஜயகுமார்.

சேலம், சூரமங்கலம் தர்மாநகரைச் சேர்ந்த விஜயகுமாரின் மனைவி பெயர் ஷீலா. ரிச்சர்ட் என்ற மகனும் ரியான் என்ற மகளும் உள்ளார்கள்.

விகடன், மிகவும் துடிப்பான ஓர் புகைப்படக் கலைஞனை இழந்துள்ளது. விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

அடுத்த கட்டுரைக்கு