Published:Updated:

விகடன் - வாசகர்கள் பங்களிப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள்!

பயனாளிகள்

``எங்கள் கிராமத்தை தேடிவந்து முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து நின்ற குடும்பங்களுக்கு காலத்தால் மறக்க முடியாத பேருதவியை விகடனும் அதன் வாசகர்களும் செய்துள்ளார்கள்."

விகடன் - வாசகர்கள் பங்களிப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள்!

``எங்கள் கிராமத்தை தேடிவந்து முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து நின்ற குடும்பங்களுக்கு காலத்தால் மறக்க முடியாத பேருதவியை விகடனும் அதன் வாசகர்களும் செய்துள்ளார்கள்."

Published:Updated:
பயனாளிகள்

இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அல்லலுறும் போதெல்லாம் அவர்களுக்குக் கரம் நீட்டி கைதூக்கிவிடுவதில் முன்நிற்பார்கள் விகடன் வாசகர்கள். கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களையும் வீடுகளையும் இழந்து தவித்துநின்ற வாசகர்களுக்கு உதவி தேவை என்று விகடன் கோரிக்கை விடுத்தபோதும் வாசகர்கள் உணர்வுபூர்வமாகத் தங்கள் உதவிகளைக் குவித்தார்கள். வாசகர்களின் பங்களிப்போடு, விகடன் குழுமத்தின் வாசன் அறக்கட்டளையும் இணைய, புயல் பாதித்த தருணத்தில், பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அடிப்படை உதவிகளை வழங்கினார்கள் விகடன் குழுவினர். பெரிதும் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை மீட்டு வளர்ப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சிகள், கருகும் பயிர்களைக் காக்க ஜெனரேட்டர் உதவிகள், மரங்களை வெட்டி ஒதுக்குவதற்கான உதவிகள், புயலால் குலைந்து கிடந்த அறந்தாங்கி இலங்கை அகதிகள் முகாமை மேம்படுத்தும் பணிகள் என வாசகர்கள் பங்களிப்போடு விகடன் பல பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது.

புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள்
புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள்

தொடர்ந்து, கஜா புயல் கோரத்தாண்டவத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம், முதலியார் தோப்பு, வேட்டைக்காரணிருப்பு ஆகிய பகுதிகளில் 10 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கின.

கட்டுமானப் பணிகள் நிறைவுற்று 06.12.2019 வெள்ளிக்கிழமையன்று வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்வு நடந்தது. புஷ்பவனம் நண்பர்கள் மன்றம் மற்றும் கிராம வளர்ச்சிக்குழு அலுவலக வளாகத்தில் நடந்த இந்த விழாவில் புஷ்பவனம், முதலியார் தோப்பு, வேட்டைக்காரணிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பெரியவர்கள் கலந்துகொண்டார்கள்.

மஞ்சள், குங்குமம், காமாட்சி விளக்கு, தாம்பூலம், தேங்காய், பழம், பூவோடு வீட்டின் சாவிகளை ஜூனியர் விகடன் ஆசிரியர் ச.அறிவழகன் பயனாளிகளிடம் ஒப்படைத்தார். விகடன் குழும முதன்மைப் பொறுப்பாசிரியர்கள் கா.பாலமுருகன், வெ.நீலகண்டன், நாகை மாவட்ட விகடன் குழும நிருபர் மு.ராகவன் மற்றும் வாசன் அறக்கட்டளையின் திட்ட அலுவலர் ச.மணிகண்டன் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர். குழந்தைகள் சகிதம் மிகவும் நெகிழ்ச்சியாக 10 குடும்பத்தினரும் அதைப் பெற்றுக்கொண்டார்கள்.

புஷ்பவனம் கிராமத்தின் சார்பில் பேசிய ஓய்வுபெற்ற கல்வித்துறை அலுவலர் பசுபதி, ``எங்கள் கிராமத்தை தேடிவந்து முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து நின்ற குடும்பங்களுக்கு காலத்தால் மறக்க முடியாத பேருதவியை விகடனும் அதன் வாசகர்களும் செய்துள்ளார்கள். இதற்கு எங்கள் கிராமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

முதலியார் தோப்பு கிராமத்தின் சார்பில் பேசிய செல்லம்மாள், ``புயல், மழை, வெயில் என எல்லாவற்றையும் தாங்கக்கூடிய கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தந்த விகடனுக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை " என்று நெகிழ்ந்தார்.

``புயலால வீடு தரைமட்டமாகிப் போச்சு. நம்ம வாழ்வாதாரத்தை வச்சு இனி வீடு கட்டியெல்லாம் வாழ முடியுமான்னு தோணுச்சு. இயலாமையால கண்ணீர் விடத்தான் முடிஞ்சுச்சு. ஒவ்வொரு நாளும் மகமாயிக்கு விளக்குப் போட்டு வேண்டுவேன். அந்த தெய்வமே விகடன் வாசகர்கள் மூலமா வழிகாட்டி இருக்குன்னு நினைக்கிறேன். இப்படியொரு கான்கிரீட் வீட்டை, எங்க வாழ்நாளில நெனச்சுகூட பார்க்க முடியாது. எல்லாமே கனவு போல இருக்கு" என்றார் முதலியார்தோப்பைச் சேர்ந்த சுதா.

வீடுகள் பெற்றவர்கள்
வீடுகள் பெற்றவர்கள்

அடுத்தகட்டமாக, வாசகர்களின் பங்களிப்போடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தொடங்கவிருக்கிறது.