Election bannerElection banner
Published:Updated:

``இப்பதான் எங்க வாழ்க்கையில நம்பிக்கை வந்திருக்கு!" - உதவியால் நெகிழும் சந்தோஷின் தாய்

குடும்பத்துடன் சந்தோஷ்
குடும்பத்துடன் சந்தோஷ்

தலசீமியா பாதிப்புக்கு உரிய நபரிடமிருந்து ஸ்டெம்செல் தானம் பெறுவதுதான் ஒரே தீர்வு. இதற்காகவே, மற்றொரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத்தனர் சந்தோஷின் பெற்றோர்.

மிகச் சிக்கலான நோய்களில் ஒன்று தலசீமியா. இந்தப் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறான் 4 வயதாகும் சந்தோஷ். 15 நாள்களுக்கு ஒருமுறை இவனது உடம்பிலுள்ள ரத்தம் முழுமையாக எடுக்கப்பட்டு, புது ரத்தம் செலுத்தப்படும். இவனின் அப்பா சாலையோரத்தில் செருப்புத் தைக்கும் கூலித் தொழிலாளி. சந்தோஷின் உடலில் எந்தக் காயமும் ஏற்படக்கூடாது என, எந்நேரமும் மகனைக் கவனமுடன் பார்துக்கொள்கிறார் தாய் வசந்தி. தீப்பெட்டியைப் போல சிறிய ஒண்டுக்குடித்தன வீட்டில்தான் ஜீவனம்.

குடும்பத்துடன் சந்தோஷ்
குடும்பத்துடன் சந்தோஷ்

தலசீமியா பாதிப்புக்கு உரிய நபரிடமிருந்து ஸ்டெம்செல் தானம் பெறுவதுதான் ஒரே தீர்வு. இதற்காகவே, மற்றொரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத்தனர் சந்தோஷின் பெற்றோர். மகனின் மருத்துவச் செலவுக்கு சிரமம், சரியான வேலைவாய்ப்பு இல்லாத கஷ்டம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் தவித்தனர். நிறைமாத கர்ப்பிணியாகப் பெரும் துயரில் இருந்தார் சந்தோஷின் அம்மா வசந்தி.

இவர்களின் கஷ்ட நிலை குறித்து, சில மாதங்களுக்கு முன்பு விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். உடனடியாக உதவிகள் குவியத் தொடங்கின. விகடன் வாசகர்கள் மூலம் கிடைத்த 3,10,000 ரூபாய், சந்தோஷின் எதிர்கால மருத்துவம் மற்றும் கல்வித் தேவைக்குப் பயன்படும் வகையில் நிரந்த வைப்பு நிதியாக (fixed deposit) வங்கிக் கணக்கில் சேர்க்கப்படவிருக்கிறது.

குடும்பத்துடன் சந்தோஷ்
குடும்பத்துடன் சந்தோஷ்

இதனால் சந்தோஷின் பெற்றோருக்குப் பெரும் மகிழ்ச்சி. இது குறித்துப் பேசும் வசந்தி, "சில காரணங்களுக்காக தனியார் ஆஸ்பத்திரியிலதான் சந்தோஷுக்கு இப்ப வரை சிகிச்சை கொடுக்கிறோம். நிரந்தர வருமானம் இல்லாத நிலையில, நல்ல சாப்பாடுகூட இல்லாம ஒவ்வொரு நாளும் எங்க வாழ்க்கை போராட்டமா இருந்துச்சு. வாழ்நாள் முழுக்க பையனுக்கு ரத்தம் மாத்துறது சிரமமான காரியம். ஸ்டெம்செல் சிகிச்சைதான் பையனுக்கு இருக்கிற பிரச்னைக்கு ஒரே தீர்வு. அதுக்காகப் பதிவு செஞ்சு வெச்சிருக்கிற நிலையில, மருத்துவ காரணங்களுக்காக இன்னொரு குழந்தை பெத்துக்க முடிவெடுத்தோம். ரெண்டாவது பிறந்ததும் ஆம்பள பையன்தான்.

அவனோட உடம்புல இருந்து சோதனைக்காக ஸ்டெம் செல் எடுத்திருக்காங்க. இன்னும் ரிசல்ட் வரல. அது பொருத்தமா இல்லைன்னா, உரிய டோனர் கிடைக்கிற வரை காத்திருக்கணுமாம். நாங்க உயிரோடு இருக்கிற வரைக்கும் சந்தோஷையும், சின்ன பையனையும் நல்லபடியா காப்பாத்திடுவோம். ரெண்டு பசங்களுமே ஆரோக்கியமா இருக்காங்க. கொரோனா பிரச்னை வந்ததால சந்தோஷை ஸ்கூலுக்கு அனுப்பாம இருக்கோம். நிலைமை சரியானதும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சுடுவான்.

உதவிய வாசகர்கள்
உதவிய வாசகர்கள்

இதுக்கிடையே எங்க கஷ்ட நிலை பத்தி விகடன்ல பேட்டி வெளியாகி, நிறைய உதவிகள் கிடைச்சது. அதுக்குப் பிறகுதான் சந்தோஷோட எதிர்காலம் பத்தின பயம் எங்களுக்குக் கொஞ்சம் குறைஞ்சது. எங்களுக்குப் பண உதவி செஞ்சு நம்பிக்கையைக் கொடுத்த எல்லாத்துக்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கோம். தக்க சமயத்துல இந்த உதவி எங்களுக்குக் கிடைக்கலைனா, எங்க வாழ்க்கையே கேள்விக்குறி யாகியிருக்கும். இப்ப ரொம்பவே நம்பிக்கையுடன் இருக்கோம். உதவி செஞ்ச எல்லோருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு