Published:Updated:

எளியோருக்காகவே எழுதியவர்!

வீ.கே.ரமேஷ்
வீ.கே.ரமேஷ்

இவர் எழுதிய கட்டுரைகள் எத்தனையோ பேரின் வாழ்வை மாற்றியிருக்கின்றன; ஏராளமான குழந்தைகளின் படிப்புக்கு வெளிச்சம் பாய்ச்சியிருக்கின்றன.

ஆதிக்கச் சாதியினரால் ஒடுக்கப்படும் விளிம்பு நிலை மக்கள், அடிப்படை வசதிகூட இல்லாமல் தத்தளிக்கும் எளிய மக்கள்; இப்படி யாருக்கெல்லாம் நீதி தேவையோ, அவர்களைத் தேடித் தேடிச் சென்று செய்தியாக்கி தீர்வு தேடித் தந்த விகடன் குழுமத்தின் சேலம் மாவட்ட சிறப்பு செய்தியாளரான வீ.கே.ரமேஷ் (எ) கே.ராமசாமி கொரோனா தொற்று காரணமாக இன்று (18/06/2021) காலை மரணமடைந்தார்.

வீ.கே.ரமேஷ்
வீ.கே.ரமேஷ்

2006-ம் ஆண்டு விகடனில் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டாக பணிக்குச் சேர்ந்த வீ.கே.ரமேஷ் எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாகப் பின்னாளில் நிருபரானார். உழைப்பு… உழைப்பு… உழைப்பு என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டிருந்த அவர், நிருபரானது முதல் விகடன் குழும இதழ்கள் அனைத்திலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.

கடந்த மே மாதம் 22-ம் தேதி வீ.கே.ரமேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சேலத்தில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. 15 நாள்களுக்கு மேலாக வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் இருந்தவர் சில நாள்களுக்கு முன்புதான் ஆக்ஸிஜனுக்கு மாற்றப்பட்டார். `இன்னும் ஓரிரு நாளில் உடல்நலம் தேறி வந்துவிடுவார்’ என்று எல்லோரும் நம்பியிருந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வீ.கே.ரமேஷ்
வீ.கே.ரமேஷ்

எழுத்தின் மீது தீரா தாகம் கொண்ட வீ.கே.ரமேஷ், சமூகத்தில் பல்வேறு நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலித்தார். விகடன் குழும இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் எத்தனையோ பேரின் வாழ்வை மாற்றியிருக்கின்றன; ஏராளமான குழந்தைகளின் படிப்புக்கு வெளிச்சம் பாய்ச்சியிருக்கின்றன. ஜெயலலிதா, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்த காலத்தில் பெங்களூரிலேயே தங்கியிருந்து விசாரணை விவரங்களை ஜூனியர் விகடனில் தொடர்ந்து எழுதினார் வீ.கே.ரமேஷ். சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

கடந்த வருடம் கந்துவட்டி கொடுமையால் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்றது. பிள்ளைகள் மட்டும் பிழைத்துக்கொள்ள, பெற்றோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சம்பவம் குறித்து, ``சத்தம் போடாம அமைதியா படுத்திருங்க... கொஞ்ச நேரத்துல உசுரு போயிடும்!” என்ற தலைப்பில் வீ.கே.ரமேஷ் எழுதிய கட்டுரை கந்துவட்டி கொடுமையின் கோர முகத்துக்கான துயர ஆவணம்.

“சத்தம் போடாம அமைதியா படுத்திருங்க... கொஞ்ச நேரத்துல உசுரு போயிடும்!”

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சென்றாயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி என்ற சிறுமி அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் முதல் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இரண்டு சிறுமிகளை ஊரில் உள்ள பலர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த கொடூரச் சம்பவம் வரை பெண் குழந்தைகளுக்கு எதிரான ஏராளமான குற்றச் சம்பவங்களை அவர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

சமூக அக்கறை மிகுந்த பத்திரிகையாளர் என்பதுடன் அதிர்ந்துகூடப் பேசாத அற்புதமான மனிதர் என்று எல்லோரிடத்திலும் பெயரெடுத்த வீ.கே.ரமேஷ், சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்தவர். அவருக்கு விசித்ரா என்ற மனைவியும் நான்கு வயதில் நிலவன் என்ற மகனும் உள்ளனர்.

வீ.கே.ரமேஷை இழந்து வாடும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் வீ.கே.ரமேஷுக்கு ஆழ்ந்த அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறது விகடன் குழுமம்.

அடுத்த கட்டுரைக்கு