Published:Updated:

"இதெல்லாம் பண்றதுல அர்த்தமே இல்லை!"- ஏன் ஊடகங்களைத் தவிர்த்தார் `சாந்தி சமூக சேவை' சுப்பிரமணியம்?!

சுப்பிரமணியம்
சுப்பிரமணியம்

விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில், சாந்தி சமூக சேவை சுப்பிரமணியத்தை சிறப்பு அழைப்பாளராக மேடையேற்றி கெளரவிக்க விரும்பினோம். ஆனால்...

முகம் காட்டாமல், முகவரியும் தெரிவிக்காமல் ஒருவர் செய்த சேவை இன்று மாநிலம் முழுவதும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளை அறங்காவலர் சுப்பிரமணியம் இறப்பு செய்தியும், அவர் செய்த சேவைகளும் தான் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நிரம்பி வழிகின்றன. இப்படி ஒரு மனிதர் நம் ஊர்களில் இல்லையே என்ற ஏக்கம், கிட்டத்தட்ட அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது.

சாந்தி சமூக சேவை
சாந்தி சமூக சேவை
5 ரூபாய் டிபன்; 30 ரூபாயில் மருத்துவம் - `கோவை சாந்தி சமூக சேவை' சுப்பிரமணியம் காலமானார்!

"இப்படிப்பட்ட ஓர் மனிதரை ஏன் ஊடகங்கள் கொண்டாடுவதில்லை, அவர் உயிரோடு இருந்தபோது ஏன் செய்தி போடவில்லை?" என்று பலரது மனங்களில் தோன்றும். ஆனால், ஊடகங்களிலோ, பொது வெளியிலேயோ தனது சேவை குறித்து பேசுவதில்லை என்பது சுப்பிரமணியத்தின் வாழ்நாள் கொள்கை.

சாந்தி சமூக சேவை அறக்கட்டளை குறித்து விகடனில், ஏற்கெனவே கட்டுரைகள் வெளியாகியுள்ளன. செய்தியை கடந்து இன்னொரு முயற்சியையும் விகடன் செய்தது. கடந்த 2018-ம் ஆண்டு, விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில், சுப்பிரமணியத்தை சிறப்பு அழைப்பாளராக மேடையேற்றி கெளரவிக்க விரும்பினோம். சாந்தி கியர்ஸ் நிறுவனம் இருந்தபோது, அவ்வப்போது ஊடகங்களை சந்தித்து வந்த சுப்பிரமணியம், சாந்தி சமூக சேவையில் இறங்கிய பிறகு, அதை அரிதிலும் அரிதாக்கினார்.

சாந்தி சமூக சேவை
சாந்தி சமூக சேவை

சாந்தி கியர்ஸ் நிறுவனம், இயங்கிக் கொண்டிருந்தபோது விகடன் சார்பில் சுப்பிரமணியத்தை சந்திக்கவும் செய்துள்ளோம். அது ஒரு நல்ல உறவாகத்தான் இருந்துள்ளது. அந்த நம்பிக்கையில், சாந்தி சமூக சேவை அலுவலகத்துக்கு சென்றோம்.

மேலாளரை சந்திக்க விருப்பம் தெரிவித்தோம். "சேவை மனப்பான்மையுடன் இயங்கி வரும் உங்கள் நிறுவனத்தை ஏதாவது ஓர் வகையில் பெருமைப்படுத்த வேண்டுமென நினைக்கிறோம். எங்கள் வாசகர்களும் உங்களது சேவைப் பணிகளை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றனர். எங்களது விருது நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக உங்கள் சேர்மன் கலந்து கொள்ள வேண்டும்" என்று நம் விருப்பத்தை அவரிடம் கூறினோம்.

சாந்தி சமூக சேவை
சாந்தி சமூக சேவை

"ஓகே... எங்கள் சேர்மனிடம் கேட்டுவிட்டு, உங்களுக்குத் தகவல் சொல்கிறோம்" என்று பதிலளித்தார். நமக்கு அதுவே ஆச்சர்யம்தான். ஏனென்றால், இந்த விஷயத்தில் உறுதியான கொள்கை பிடிப்புடன் இருப்பவர்கள், "பேசிவிட்டுச் சொல்கிறோம்" என்றது சற்றே எதிர்ப்பார்ப்பை கூட்டியது.

அந்த எதிர்ப்பார்ப்பை ஒரு நாள் மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தது. அடுத்த நாள் அந்த மேலாளருக்கு நாம் அழைத்துப் பேசினோம். மேலாளர் சில நொடிகள் பேசிவிட்டு, சேர்மனிடம் கொடுத்தார். "ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னை அழைச்சதுக்கு நன்றி. விகடனுக்கும், எனக்கும் ஒரு சிறப்பான உறவு இருக்கு. இதை நான் என்னோட மனதிருப்திக்காக மட்டும்தான் பண்ணிட்டு இருக்கேன். பத்திரிகை, ஊடகங்கள், பொதுவெளில நானே பேசினா, அது பேரு, புகழுக்காக பண்ற மாதிரி ஆகிடும்.

சுப்பிரமணியம்
சுப்பிரமணியம்

அப்படி நடந்துட்டா, இதையெல்லாம் பண்றதுல அர்த்தமே இல்லை. அதனாலதான், எந்த இடத்துலையும் என் புகைப்படம் கூட வந்துடக் கூடாதுனு உறுதியா இருக்கேன். என்னால அங்க வரமுடியாது. நான், அவ்ளோ தூரம் வந்தா, உங்களுக்கு ஆகற செலவுல, கஷ்டப்படறவங்களுக்கு உதவி பண்ணுங்க. அதுவே நான் வந்த மாதிரிதான்" என்று கூறி பெருந்தன்மையுடன் பேசி நம் அழைப்பைத் தவிர்த்தார்.

சிறிது நேரம் கழித்து அந்த மேலாளர் நம்மை தொடர்பு கொண்டார். "சார் தப்பா நினைச்சுக்காதீங்க... நீங்க நேர்ல வந்தப்பவே, முடியாதுனு சொல்லிருக்க முடியும். இதுதான் நடக்கும்னும் எனக்கு நல்லா தெரியும். ஆனா, சேர்மனுக்கு விகடன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கு. அதனாலதான், அவர்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன். சார் தன்னை யார்னு, எங்க ஊழியர்களுக்கே தெரியாக்கூடாதுனு நினைப்பார். இப்பக் கூட, நீங்க வந்து பார்த்தா, அவர் ஒரு லுங்கியோ, ட்ராக் பேன்ட்டோ போட்டுட்டு செடிக்குத் தண்ணி ஊத்துறதுனு ஏதாவது பண்ணிட்டுதான் இருப்பார்.

சுப்பிரமணியம்
சுப்பிரமணியம்

அவர்தான், எங்க சேர்மன்னு, இங்க நிறைய பேருக்கு தெரியாது. அதைத்தான் சேர்மனும் விரும்பறார். இங்க எல்லாரும் ஒண்ணுதான். இருக்கறவரை நம்மால், முடிஞ்ச நல்லதுகளை பண்ணனும். அதை நம்ம எங்கயும் அடையாளப்படுத்திக்கக் கூடாதுனு சொல்வார். புரிஞ்சுக்கோங்க. நன்றி" என்றார்.

அந்த மேலாளர் கூறியதுதான் கடைசிவரை நடந்தது. தன் உயிர் இருந்தவரை சுப்பிரமணியத்தின் புகைப்படங்கள் பொதுவெளிக்கு வரவில்லை. உயிரிழந்தப் பிறகுதான், பலராலும் அவரது முகத்தை பார்க்க முடிந்துள்ளது. இறப்பதற்கு முன்பு கூட, நான் இறந்துவிட்டால் யாருக்கும் தகவல் சொல்ல வேண்டாம். இறுதி ஊர்வலத்தில் கூட்டம் கூட்ட வேண்டாம். எளிமையாக தகனம் செய்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால், அவர் இறந்த தகவல் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம்
சுப்பிரமணியம்
ஊழியர்கள் 4 பேர்தான் வாகனத்தில் பின்னால் சென்றுள்ளனர். அவர்களுக்கும், தகனம் செய்த பிறகே இது நம் உரிமையாளர் என்று தெரிந்துள்ளது. இறுதி மூச்சு முடிந்து, சாம்பலாகும் வரை, தன் கொள்கையில் சுப்பிரமணியம் உறுதியாகவே இருந்துள்ளார். இப்போது சுப்பிரமணியத்தின் முகம் தெரிந்துவிட்டது. அதை மக்கள் மனதில் என்றென்றும் அழிக்க முடியாது.
அடுத்த கட்டுரைக்கு