வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கின்றன. பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி கரைகளை உடைத்துக்கொண்டு குடியிருப்புப்புகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உலக்குடி கிராமத்தில், வைகை அணையில் நீர் திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக கிருதுமால் நதியில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், உலக்குடி ஊராட்சிக்குட்பட்ட திருமாணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான பாலாயி என்பவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்வதற்காக உலக்குடி சுடுகாட்டுக்கு, கிருதுமால் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் இடுப்பளவு நீரில் கயிறு கட்டிக்கொண்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி, ஆற்று வெள்ளத்தைக் கடந்து உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றனர். உடலைக் கொண்டு செல்லும் வழியில், 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் கயிறுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து திருமாணிக்கனேந்தல் கிராம பொதுமக்கள் கூறுகையில், ``நாள்தோறும் உலக்குடி கிராமத்துக்கு வந்து தான் பொருள்கள் வாங்கி செல்கிறோம். மழைக்காலத்தில் வைகை அணை திறக்கப்படும் சமயத்தில் கிருதுமால் நதியில் வெள்ளம் வருவதால் எங்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. எங்கள் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நியாயவிலைக்கடையில் தொடங்கி, பள்ளிக்கூடம், மருத்துவமனை, மளிகைக் கடைகள் என அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காகத் தினமும் 3 கிலோ மீட்டர் நடந்து இந்த நதியைக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலையில் எங்கள் கிராமம் இருக்கிறது. இடுப்பளவு நீரில் பள்ளிக்குழந்தைகள் தங்கள் புத்தகப் பைகளைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு நடப்பதோடு, அவர்களின் சீருடைகளும் ஆற்றல் நனைந்து புத்தகப் பையோடு நீரில் விழுந்து விடுகின்றனர். அதனால், அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

மிகவும் சிரமப்பட்டு நதியைக் கடந்து பிறகாவது, வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்தால் போதிய சாலை வசதிகள் இல்லாததால் அதுவும் பெரும் பாடாக இருக்கிறது. சாலைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சீரமைப்பு பணிக்காக வெட்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. ஒருபுறம் சாலை வசதி, மறுபுறம் நதியில் வெள்ளம் எனப் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த அவலநிலை இப்படியே நீடிக்கக் கூடாதென்று, மாவட்ட நிர்வாகத்திடம் நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்றனர் விரக்தியுடன்.