மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்தவர் மீனவர் லெட்சுமணன். பூம்புகாரிலுள்ள மீனவர்கள், வெளியூர் சென்று மீன்பிடிக்க கிராமப் பஞ்சாயத்தார் கட்டுப்பாடு விதித்ததை மீறி லெட்சுமணன் குடும்பத்தினர், வெளியூரில் தங்கி மீன்பிடித்துவந்தனர். ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லெட்சுமணன் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் ஊர் பஞ்சாயத்தார் அபராதம் விதித்தனர். அந்தப் பணத்தை செலுத்த முடியாததால் கிராம பஞ்சாயத்தார் லெட்சுமணன் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர்.

மேலும் இவர்களது குடும்பத்துடன் பேசுபவர்களுக்கும் லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்திருந்ததால் லெட்சுமணன் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பலமுறை லெட்சுமணன் குடும்பத்தினர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மூன்று ஆண்டுகளைக் கடந்தும், தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வருமானத்துக்கு வழியின்றி லெட்சுமணன் தவித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லெட்சுமணன், அவரின் மகன் வினோத், மனைவி குணவதி ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அதன் பின்னர் வளாகத்திலுள்ள தேசியக்கொடிக் கம்பத்தின் கீழே அடுப்புவைத்து, சமையல் செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் உடன்படாத காரணத்தால் போலீஸார், இதுபற்றி உடனடி நடவடிக்கை எடுப்பதாகக் கூறி தம்பதியை வலுகட்டாயமாக வெளியேற்றினர்.