Published:Updated:

`பாலம் இல்லை!' - இடுப்பளவு நீரில் சடலத்தைச் சுமந்துசெல்லும் நாங்குநேரி கிராம மக்கள்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே ஆற்றைக் கடந்து செல்வதற்கு பாலம்கட்டிக் கொடுக்காததால், இறந்தவர் உடலை தண்ணீரில் சுமந்து சென்று புதைத்த அவலம் நிகழ்ந்துள்ளது.

புதுத்தெரு கிராமம்
புதுத்தெரு கிராமம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே புதுத்தெரு கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு செல்ல வேண்டுமானால் ஈரடியான் கால்வாயைக் கடந்துதான் செல்ல வேண்டும். கால்வாயில் தண்ணீர் வரும்போது பொதுமக்களும் பள்ளிக் குழந்தைகளும் கால்வாய்க்குள் இறங்கிச் செல்ல வேண்டியுள்ளது.

புதுத்தெரு கிராமம்
புதுத்தெரு கிராமம்

தற்போது தொடர்மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. அந்தத் தண்ணீர், ஈரடியான் கால்வாய் மூலமாக அப்பகுதியில் உள்ள குளங்களுக்குச் செல்கிறது. அதனால் கால்வாயில் தண்ணீர் அதிகமாகச் செல்கிறது.

`ஆற்றில் கழுத்தளவு தண்ணீர்; மறுகரையில் மாற்றுத்துணி!’ - நாகை கிராம மக்களின் துயரம்

ஈரடியான் கால்வாயில் பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. புதுத்தெரு கிராமம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இருப்பதால், சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்தபோது, அப்பகுதி மக்கள் பாலம் கட்டித்தர வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பைச் செய்திருந்தனர். அப்போது அதிகாரிகள் பொதுமக்களுக்கு பாலம் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து சமாதானப்படுத்தினார்கள்.

புதுத்தெரு கிராமம்
புதுத்தெரு கிராமம்

தற்போது வரை அங்கு பாலம் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அதனால் பொதுமக்கள் தொடர்ந்து வேதனையை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில், புதுத்தெரு கிராமத்தைச் சேர்ந்த ஞானசெல்வம் என்ற 90 வயது மூதாட்டி நேற்று உயிரிழந்தார். அவரின் உடலை எடுத்துச் செல்வதற்கு மாற்றுப் பாதையோ பாலமோ இல்லாததால் ஈரடியான் கால்வாய் வழியாக இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நடந்து உடலைச் சுமந்து சென்றார்கள்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, ``எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தினமும் கால்வாய் தண்ணீரில் நனைந்தபடியே செல்கிறார்கள். வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு தண்ணீரைக் கடக்க வேண்டியதிருக்கிறது. இந்தக் கால்வாயில் பாலம் அமைத்துக் கொடுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தண்ணீரில் கொண்டு செல்லப்படும் இறந்தவர் உடல்
தண்ணீரில் கொண்டு செல்லப்படும் இறந்தவர் உடல்

எங்களுக்கு விரைவாக பாலம் அமைத்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் எங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம்" என்றார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகளைத் தொடங்கிவிடுவோம்" என்றார்கள்.