Published:Updated:

`ஒரு வருஷமாச்சு..இன்னும் கரன்ட் வரல!' - கஜா புயல் ஓய்ந்தும் தீராத மேலையூர் துயரம்

கஜா புயலால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

ஒக்கநாடு மேலையூர் மக்கள்
ஒக்கநாடு மேலையூர் மக்கள்

``கஜா புயலால் பாதிக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் இருளில் மூழ்கிக் கிடக்கிறது எங்கள் கிராமம். ஒரு வருடமாக இருளில் வாழ்ந்துவிட்டோம். இனிமேலும், இருட்டில் வாழ வைக்காதீர்கள், எங்களுக்கு உடனே வெளிச்சம் கொடுங்கள்'' என அரசுக்கு வேதனையோடு கோரிக்கை வைக்கின்றனர் தஞ்சை, மேலையூர் பகுதி மக்கள்.

ஒக்கநாடு மேலையூர் பள்ளி மாணவர்கள்
ஒக்கநாடு மேலையூர் பள்ளி மாணவர்கள்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி கஜா புயல் கோரத் தாண்டவம் ஆடியது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தென்னை மரங்கள் வோரோடு சாய்ந்தன. டிரான்ஸ்ஃபார்மர்கள், மின் கம்பங்கள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து டிரான்ஃபார்மர்களை சரிசெய்து மின்சாரம் கொடுப்பதற்குப் ஒரு வாரத்துக்கு மேல் ஆனது. வெளியூரில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன. நாள்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் முழுமையாக மறையவில்லை. இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் போராட்டத்தின் மூலம் அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.

ஒக்கநாடு மேலையூர் மக்கள்
ஒக்கநாடு மேலையூர் மக்கள்

இந்நிலையில், கஜா புயலால் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெருவில் மின்கம்பங்கள் சாய்ந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புயல் முடிந்த பிறகு, மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்சாரம் வந்துவிடும் எனக் காத்துக் கிடந்த மக்களுக்கு நாள்கள்தான் ஓடியதே தவிர, மின்சாரம் வரவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. இப்போது வரை இருளில் மூழ்கிக் கிடக்கிறது குறிப்பிட்ட அந்தப் பகுதி.

மேலையூர் பகுதி மக்களிடம் பேசினோம். ``கஜா புயலில் மின் கம்பங்கள் சாய்ந்து கரன்ட் கட் ஆனதுடன் சாலைகளும் சேதமடைந்தன. ஒவ்வொரு பகுதியாக சீரமைப்புப் பணி நடைபெறுவதால் அதை முடித்துக்கொண்டு எங்கள் பகுதிக்கும் வருவார்கள் எனக் காத்திருந்தோம். ஆனால், எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஏரியாக்களில் மின் இணைப்பு கொடுத்துவிட்டனர். ஆனால், எங்கள் ஏரியா மட்டும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கித் தவிக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இரவு நேரத்தில் படிக்க முடிவதில்லை. மாலை வந்ததுமே பாம்பு மற்றும் பூச்சிகளுக்கு பயந்து மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்ற நிலை உள்ளது. இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது.

ஒக்கநாடு மேலையூர் மக்கள்
ஒக்கநாடு மேலையூர் மக்கள்

இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் மக்களைத் திரட்டி ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினோம். இதைத் தொடர்ந்து விரைவில் சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஒரு வருடமாக இருளில் வாழ்ந்துவிட்டோம். இனிமேலும் இருளில் வாழவைக்காதீர்கள். சீக்கிரமே எங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுங்கள்" எனக் கண்ணீர்மல்க பேசி முடித்தனர்.