Election bannerElection banner
Published:Updated:

`சிலர் கேலி செய்கிறார்கள்.. ஆபத்தை உணரவில்லை!’ -கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கிய கிராம இளைஞர்கள்

கிருமிநாசி தெளிப்பு
கிருமிநாசி தெளிப்பு

கொரோனோவுக்கு எதிராக மைக் செட் விழிப்புணர்வு முதல் மாஸ்க் வழங்குவது முதல் தனிச்சையாகக் களம் இறங்கிய தெக்கூர் கிராமம்.

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் அதிர்ந்துபோய்க் கிடக்கின்றன. வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனாவில் தொடங்கிய பாதிப்பு தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல கிராமங்கள் கொரோனாவிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

மைக் செட் விழிப்புணர்வு
மைக் செட் விழிப்புணர்வு

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை தெக்கூர் கிராமத்து இளைஞர்கள் கொரோனாவிற்கு எதிராக விழிப்புணர்வும் பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்களும் காவல்துறையினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தெக்கூர் இளைஞர்கள், 'சிவகங்கை மாவட்டத்தில் தெக்கூர் கிராமம் ஒரு முன்மாதிரியான கிராமமாக விளங்குகிறது. வ.உ.சி., இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் தொடர்ந்து சில வருடங்களாக ஆகச்சிறந்த சமூகப் பணிகளைச் செய்துவருகிறோம். கடந்த உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் 98 % ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாகக் களப்பணி ஆற்றினோம்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

மரக்கன்றுகள் நடுவது, குளம் தூர்வாருவது, மகளிர் அமைப்புகளுக்கு இலவச தொழில் பயிற்சி கொடுப்பது, பள்ளி மாணவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுவது என கிராமத்தின் அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளோம். இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு எதிராகக் கடந்த 19-ம் தேதி முதல் திட்டமிட்டு தொடர்ந்து செயல்படுகிறோம்.

மானாமதுரை சிப்காட் போலீஸ் அறிவுறுத்தலின் படி கொரோனாவிற்கு எதிராக இரவு, பகலாகக் களப்பணி ஆற்றுகிறோம். எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள 3 ஊராட்சி உட்பட்ட சுமார் 11 கிராமத்திற்கும் மைக் செட் மூலம் ஆட்டோவில் கொரோனா குறித்து முழுமையாக விழிப்புணர்வு செய்கிறோம். முதற்கட்டமாக 500 மாஸ்குகள் வழங்கியுள்ளோம்.

விழிப்புணர்வு நோட்டீஸ்
விழிப்புணர்வு நோட்டீஸ்

கிராமம் முழுதும் வேப்பிலை மற்றும் மஞ்சள் நீர் கலந்த கிருமி நாசினியைத் தெளிக்கிறோம். பொதுக் கழிப்பறை மற்றும் குறிப்பிட்ட இடங்களில் வேதிப் பொருள்கள் கலந்த கிருமி நாசினிகளைத் தெளிக்கிறோம். மைக் செட் மூலம் முதல்வர் உட்பட அதிகாரிகள் ஆடியோவைப் பயன்படுத்திக் கொரோனா விழிப்புணர்வு ஒலிபரப்புகிறோம். எங்கள் நற்பணி மன்றத்திற்கு நேரு யுவகேந்திராவும் இணைந்து உதவிகளைச் செய்துவருகின்றது. இதனால் எங்கள் நற்பணி மன்ற இளைஞர்களை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் பாராட்டி வருகின்றனர். அதைச் சிலர் கேலியாகப் பார்க்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. பொது இடங்களில் அமர்ந்து தாயம் விளையாடுவது, அரட்டை அடிப்பது, மைதானங்களில் இறங்கி விளையாடுவது என ஆபத்தை உணராமல் செயல்படுகின்றனர்’’ எனத் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு