Election bannerElection banner
Published:Updated:

`70 ஆண்டு கோரிக்கை; பணம் கொடுத்த ஊராட்சித் தலைவி!' -ஒரேவாரத்தில் பாலம் அமைத்த தெங்குமரஹாடா மக்கள்

பாலம் அமைக்கும் பணியில் பொதுமக்கள்
பாலம் அமைக்கும் பணியில் பொதுமக்கள்

பஞ்சாயத்துத் தலைவரின் சொந்தப் பணத்தில், ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தற்காலிகப் பாலத்தை அமைத்து அசத்தியிருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது தெங்குமரஹாடா மலைக்கிராமம். இந்த 25 கி.மீ தூரமும் யானை, புலி, சிறுத்தைகள் நடமாடும் அடர் வனப்பகுதியாகும். பேருந்து மூலமாக இந்த வனப்பகுதியைக் கடந்தாலும் தெங்குமரஹடாவுக்குச் சென்றுவிட முடியாது. ஊருக்கும் வனப்பகுதிக்கும் இடையேயுள்ள சுமார் 50 மீட்டர் நீளமுள்ள மாயாற்றைக் கடக்க வேண்டும். மழைக்காலங்களில் இந்த மாயாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும். மக்கள் எங்கும் செல்ல முடியாது, வீட்டிலேயேதான் முடங்கிக் கிடக்க வேண்டும்.

மற்ற சமயங்களில் இந்த மாயாற்றைப் பரிசல் மூலமாகத்தான் மக்கள் கடப்பார்கள். இந்த மாயாற்றைக் கடக்க பாலம் கேட்டு, தெங்குமரஹாடா கிராம மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், பஞ்சாயத்துத் தலைவர் தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொடுக்க, ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆற்றினைக் கடக்க தற்காலிகத் தரைப்பாலம் அமைத்து அசத்தியிருக்கின்றனர்.

பாலம் அமைக்கும் பணியில்
பாலம் அமைக்கும் பணியில்

இதுகுறித்து தெங்குமரஹாடா பஞ்சாயத்துத் தலைவர் சுகுணாவிடம் பேசினோம். ``மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றைக் கடக்க முடியாமல் அவஸ்தைப்படுவதும், ஆற்றில் தண்ணீர் குறைந்தால் பரிசலில் செல்ல முடியாத சூழலிலும் சிக்கித் தவிக்கிறோம். தற்போது மாயாற்றினுள் குறைவான தண்ணீர் செல்வதால், பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மாயாற்றினுள் இறங்கி நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

இந்த மாயாற்றினைக் கடக்க பாலம் அமைத்துத் தர வேண்டுமென எங்கள் ஊர் மக்கள் சுமார் 70 ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளூர்ப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிகத் தீர்வு கொண்டுவர வேண்டுமென ஆலோசனை செய்தோம். மக்கள்படும் சிரமங்களைக் கண்கூடாகப் பார்த்த எனக்கு, அந்த தரைப்பாலம் அமைக்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நாமே கொடுத்துவிடலாம் எனத் தோன்றியது. உடனே வேலையை ஆரம்பித்துவிட்டோம்” என்றார்.

Vikatan

தொடர்ந்து பேசியவர், ``ஊருக்காக நல்லது செய்யணும்னு எங்கள் ஊரைச் சேர்ந்த இளம் வயதினர் பலர் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து தரைப்பாலம் அமைக்கும் வேலையில் இறங்கினோம். ஆற்றின் குறுக்கே கற்களை அடுக்கி, தண்ணீர் செல்ல ஏதுவாக சிமென்ட் குழாய்களை அமைத்திருக்கிறோம். கிட்டத்தட்ட ஒரே வாரத்தினுள் தரைப்பாலத்தினை அமைத்துவிட்டோம். இப்போது பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றித் தரைப்பாலத்தின் மூலமாக ஆற்றினைக் கடந்து செல்கின்றனர்.

பாலம் அமைக்க களமிறங்கிய பொதுமக்கள்
பாலம் அமைக்க களமிறங்கிய பொதுமக்கள்

பல ஆண்டுகளாகச் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு, தற்காலிகமாக ஒரு வசதி ஏற்படுத்திக்கொடுத்திருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தினுள் இந்த மாயாறு இருப்பதால், அதன்மீது பாலம் கட்ட அனுமதி கிடைக்கவில்லை எனச் சொல்கிறார்கள். இந்தப் பாலம் இல்லாததால் மேல்படிப்புக்குச் செல்ல முடியாமலும் வேலைக்குப் போக முடியாமலும் எங்களுடைய இரண்டு தலைமுறை மக்களின் வாழ்க்கை முடங்கிப் போய்விட்டது. அரசு முன்வந்து பாலம் அமைத்துக் கொடுத்தால், எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கைக்கு அது ஒரு பெரும் நம்பிக்கையைத் தரும்” என்றார் உறுதியான குரலில்.

பாலம் கேட்டு 70 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை... பஞ்சாயத்துத் தலைவருடன் களமிறங்கி அசத்திய மக்கள் ஈரோடு மாவட்டம்,...

Posted by Vikatan EMagazine on Thursday, February 20, 2020
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு