புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் ஏம்பல். இங்குள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்தான் தங்கள் ஊரில் உள்ள அரசு கூடுதல் ஆரம்பச் சுகாதார நிலையத்தை, வட்டார மருத்துவமனையாக மாற்றும் முயற்சியில் இறங்கிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏம்பல் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஏராளமான மருத்துவ உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு நேரத்திலும் 34 பேரிடம் ரூ.2.69 லட்சம் நிதி திரட்டி ஹைடெக் எக்ஸ்ரே மிஷினை வாங்கிக்கொடுத்துள்ளனர். ரத்தம், சர்க்கரை, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவிகள், ஈ.சி.ஜி பரிசோதனைக் கருவி, ஸ்கேன் வசதி, ஆம்புலன்ஸ் வசதி, தற்போது ஹெடெக் எஸ்ரே மிஷின் வசதி உள்பட அரசு மருத்துவமனையில் இருக்கும் அத்தனை வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் காணப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வரும் நிலையிலும், நிதி திரட்டி எக்ஸ்ரே மிஷினை நிறுவியுள்ள இளைஞர்களுக்குச் சுற்றுவட்டாரப்பகுதி கிராம மக்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கிராமத்து இளைஞர்களிடம் பேசினோம்,``மாவட்டத்தின் கடைக்கோடிதான் எங்கள் கிராமம். மருத்துவ அவசரம்னா ஊரில் இருந்து ரொம்ப தூரம் உள்ள அறந்தாங்கிக்கோ, அரிமளத்துக்கோதான் போகணும். ரத்த டெஸ்ட் எடுக்கக்கூட வெளியூர் போக வேண்டிய நிலை.
பொதுமக்களுக்கு ரொம்பவே கஷ்டம். எனவேதான் அங்கு இருக்கும் வசதிகள் குறித்து தெரிஞ்சிக்கிட்டு, ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அந்த வசதிகள் எல்லாத்தையும் கொண்டு வர முடிவு செஞ்சோம். 1.25 லட்சம் மதிப்பில் ரத்தப் பரிசோதனைக் கருவி, ரூ.45,000 மதிப்பிலான ஈ.சி.ஜி மிஷின், தனியாரின் உதவியோடு ரூ.15 லட்சத்தில் ஸ்கேன் வசதி, 15 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ரே இயந்திரம் இல்லாததுதான் ரொம்ப நாள் குறையாக இருந்துச்சு.

தற்போது அதனையும் வாங்கிக்கொடுத்துவிட்டோம். ஒரு மருத்துவமனையில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இங்க இருக்கு. அதோடு, கூடுதல் படுக்கைகள், மின்விசிறிகள், குடிநீர் வசதி என பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தியுள்ளோம். கிராம மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கணும் அதான் எங்களோட நோக்கம். சுற்றுவட்டார கிராம மக்களும் ஏம்பல் ஆரம்பச் சுகாதார நிலையத்தைப் பயன்படுத்துறாங்க. எங்களோட முயற்சிக்கு ஆதரவாக அரசும் இங்கு இரண்டு மருத்துவர்களை நியமிச்சிருக்காங்க. கூடுதல் கட்டடம் எனப் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்காங்க. ஆனாலும், இதனை வட்டார ஆரம்ப சுகாதர நிலையமாக மாற்ற வேண்டும். மேலும் சித்தா பிரிவு துவங்க அரசு நடவடிக்கை எடுக்கணும்" என்கின்றனர்.