Published:Updated:

`கொள்ளைபோன ஐம்பொன் சிலைகள்; அருள்வாக்கு சொன்ன பெண்!’ - கோடியக்கரை காட்டில் தேடும் கிராமத்தினர்

மு.இராகவன்

நாகை மாவட்டம் கோடியக்கரை கோயிலில் கொள்ளைபோன ஐம்பொன் சிலைகளைத் தேடி, கிராம மக்கள் இரண்டு நாள்களாக அடர்ந்த காட்டில் புகுந்து, தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

kodiyakarai forest
kodiyakarai forest ( prasanna venkatesh )

நாகை மாவட்டம் கோடியக்கரை கோயிலில் கொள்ளைபோன ஐம்பொன் சிலைகளைத் தேடி, கிராம மக்கள் இரண்டு நாள்களாக அடர்ந்த காட்டில் புகுந்து, தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

kodiyakarai forest
kodiyakarai forest
prasanna venkatesh

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பிரசித்திபெற்ற கோடிமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 14-ம் தேதி இரவு இக்கோயிலின், பின்புறமுள்ள மதில் சுவரில் ஏறி உள்ளே புகுந்து, கோயிலின் மூன்று பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த மாரியம்மன், முருகன், தேவசேனா, வள்ளி ஆகிய ஐம்பொன் சிலைகளைத் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொள்ளை நடந்த மறுநாள் சேர்வராயன் கோயில் காட்டுப்பகுதியில் கும்பகோணம் நாச்சியார்கோவில் பகுதியைச் சேர்ந்த சிலரும், அகஸ்தியம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சிலரும் பூஜை நடத்த வந்தபோது அவர்களை கோடியக்கரை மக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் சிலை செய்பவர்கள் என்றும், அகஸ்தியன்பள்ளியில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

kodiyakarai Search
kodiyakarai Search

இதற்கிடையே கோடியக்கரையிலுள்ள பெண் ஒருவர் சாமியாடி , ``கொள்ளைபோன கோயில் சிலைகள் ஊரைவிட்டு வெளியே செல்லவில்லை. விற்கப்படவுமில்லை. பூமியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதி மற்றும் சதுப்பு நிலப் பகுதியில் தேடிப் பார்த்தால் சுவாமி சிலைகள் திரும்பக் கிடைத்துவிடும்" என்று அருள்வாக்கு கூறியிருக்கிறார்.

களவாடப்பட்ட சிலைகளை காவல்துறை ஒருபுறம் தேட, பெண் சாமியாடியின் அருள்வாக்கை நம்பும் கிராம மக்கள் கோயிலின் முன்பு திரண்டு தனித்தனி குழுவாக பிரிந்து, காட்டுப்பகுதிகளில் சுவாமி சிலைகளைத் தேடிவருகின்றனர். ஊரில் உள்ள சிறுசிறு குளங்களில் உள்ள தண்ணீரை இறைத்து அதில் சிலைகள் மறைத்து வைத்துள்ளனரா என்றும் சோதனை நடத்துகின்றனர். இப்பணியில் கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் ஈடுபட்டுள்ளதால் இரண்டு நாள்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

kodiyakarai
kodiyakarai

இதுகுறித்து காவல்துறையில் கேட்டபோது, ``அவர்கள் தெய்வ நம்பிக்கையில் தேடுகிறார்கள். நாங்கள் முறைப்படி குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்கள் மூலம் சிலைகளை மீட்க உரிய நடவடிக்கை எடுத்துவருகிறோம் " என்றனர்.