Published:Updated:

நீலகிரி: 40 ஆண்டுக்காலச் சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவப் பயிற்சி மையம்! - தவிக்கும் கிராம‌ மக்கள்

40 ஆண்டுக்கால சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவம்
40 ஆண்டுக்கால சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவம்

பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களான இந்த கிராம மக்கள், கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்த சாலையை, ராணுவத்தினர்‌ தற்போது முள்வேலியிட்டு தடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள வெலிங்டன் பகுதியில் எம்.ஆர்.சி எனப்படும் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையம் மற்றும் டி.எஸ்‌.எஸ்.சி எனப்படும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரி ஆகியவை இயங்கிவருகின்றன. இந்த மையங்களைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. இந்த மையத்தின் மிக அருகிலேயே அமைந்துள்ளது மேல்பாரத் நகர். 100-க்கும் அதிகமான குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசித்துவருகின்றன.

40 ஆண்டுக்கால சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவம்
40 ஆண்டுக்கால சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவம்

பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களான இந்த கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்த சாலையை ராணுவத்தினர்‌ முள்வேலியிட்டுத் தடுத்துள்ளனர். மேலும், பஞ்சாயத்து சார்பில் சமீபத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்ட சாலையை ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு சேதப்படுத்தியுள்ளனர். ராணுவத்தின் இந்த திடீர் நடவடிக்கையால் கிராம மக்கள் அவசரத் தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.

மேல்பாரத் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், "இங்கே பெரும்பாலும் தேயிலைத் தோட்ட கூலிங்கதான் இருக்கோம். 40 வருஷத்துக்கு மேல இந்த ரோட்டைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். பஞ்சாயத்துல புதுசா சரி செஞ்சு குடுத்தாங்க. ஆஸ்பத்திரி, ரேஷன் கடைனு எல்லா அத்தியாவசியத்துக்கும் இந்த ரோடுதான் இருக்கு. திடீர்னு வந்த ராணுவம் இந்த ரோட்டுக்கு குறுக்கே முள்வேலி அடிச்சு, ஜே.சி.பி-யைவெச்சு தோண்டிப் போட்டுட்டாங்க. இதைப் பேசவே எங்க மக்கள் அச்சப்படுறாங்க. வேற சாலை வசதி இல்லாததால கர்ப்பிணிங்க, நோயாளிங்க எல்லாருமே தடுமாறி நடந்தே போக வேண்டியதா இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியலை" எனப் புலம்பினார்.

40 ஆண்டுக்கால சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவம்
40 ஆண்டுக்கால சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவம்

இந்தச் சாலை குறித்து ராணுவம் ஊர் மக்களிடம், "இந்தச் சாலை அமைந்துள்ள இடம், ராணுவத்துக்குச் சொந்தமான இடம். எனவேதான் தற்போது முள்வேலி அமைத்து, சாலையையும் அகற்றியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையத்தைத் தொடர்புகொள்ள முயன்றோம். எனினும், நமது அழைப்பை அவர்கள் ஏற்க வில்லை. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் தரும்பட்சத்தில் அதையும் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்!

அடுத்த கட்டுரைக்கு