Published:Updated:

விழுப்புரம்: `40 ஆண்டுகளாக அலையுறோம் பட்டா கிடைக்கலை!’ - வேதனையில் ஆரியூர் மக்கள்

மனு கொடுக்க வந்த ஆரியூர் மக்கள்
மனு கொடுக்க வந்த ஆரியூர் மக்கள்

கடந்த 40 வருடங்களாக, சிறு இடத்துக்குக்கூட பட்டா தரவில்லை என விழுப்புரம் மாவட்டம் ஆரியூர் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆரியூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 40 ஆண்டுக்கால கோரிக்கையுடன் வந்தனர். அவர்களிடம் பேசினோம்.

கிராம மக்கள் சார்பில் ஜெகன் என்பவர் நம்மிடம் பேசினார். ``நாங்கள் ஆரியூர் கிராமத்திலுள்ள ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள். நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் அரசுக்குச் சொந்தமான தோப்பு புறம்போக்கு நிலம் (சர்வே எண்: 119/2) சுமார் 52 ஏக்கர் இருக்கிறது. 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் குடியிருப்பு வசதியின் சிக்கல் காரணமாக எங்கள் முன்னோர்கள், இந்தத் தோப்பு புறம்போக்கு பகுதியில் குடிசைபோட்டு வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.

போராட்டத்தில் மக்கள்
போராட்டத்தில் மக்கள்

அந்தக் காலகட்டத்தில் ஆரியூர் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்த மறைந்த வரதராஜன் என்பவர், எங்களுடைய முன்னோர்களை மிரட்டி அந்த இடத்திலிருந்து விரட்டிவிட்டு அந்தக் குடிசைகளை இடித்து இடத்தைக் கைப்பற்றியிருக்கிறார். பிறகு காலப்போக்கில் அந்த இடத்தைத் தன் தேவைக்காக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். எங்கள் முன்னோர்கள் இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துவந்தது.

 சா.ஜெகன்
சா.ஜெகன்

1989-ம் வருடம் அவர்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, வரதராஜனின் தம்பி கலியவரதன் என்பவரின் பெயருக்கு பட்டா எழுதி வாங்கிக்கொண்டனர். இந்தத் தகவல், 2019-ம் வருடம் கிராம நிர்வாக அலுவலரிடம் நாங்கள் முறையிடச் சென்றபோதுதான் தெரியவந்தது.

தற்போது அந்த இடத்தில் வரதராஜன் மற்றும் கலியவரதனின் வாரிசுதாரர்கள் ஏழு பேர் தொழிற்சாலை கட்டுவதற்கு முனைப்பு காட்டிவருகின்றனர். அந்த இடத்துக்கு அருகிலுள்ள பாட்டை புறம்போக்குப் பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து மாட்டுப்பண்ணை நடத்திவருகின்றனர். அந்த வழியே பொதுமக்கள் சென்றால் தகாத வார்த்தைகளால் மிரட்டிப் பேசுகின்றனர். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு (MGNREGA) திட்டத்தின்கீழ் சாலை அமைப்பதற்கு அரசு ஆணை வழங்கியிருக்கிறது. ஆனால், இவர்கள் சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

ஈரோடு:`செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியலை!’ - விஷம் கொடுத்து கணவனைக் கொன்ற கர்ப்பிணி மனைவி

எங்கள் கிராமத்தில் சுமார் 350 ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் இருக்கின்றன. அனைவரும் வாழ்வைச் சிரமப்பட்டு நடத்திவருகிறோம். கடந்த 40 வருடங்களாக ஏழ்மையில் வாழும் எங்கள் சமூக மக்களுக்கு சிறு இடத்தில்கூட பட்டா தரவில்லை. அரசு அதிகாரிகள் அவர்களுக்கு மட்டும் எப்படி பட்டா வழங்கினார்கள் என்று தெரியவில்லை. அவர்களைக் கேட்டால் எங்கள் நிலம் என்கிறார்கள். கடந்த 2019-ல் மட்டும் மூன்று முறை தங்களுக்குள்ளாகவே தானசெட்டில்மென்ட் செய்துகொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள்
பொதுமக்கள்
தே.சிலம்பரசன்

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களில் இன்னும் எத்தனையோ குடும்பங்கள் தங்குவதற்கு இடமின்றி கஷ்டப்பட்டுவருகின்றனர். அரசுக்குச் சொந்தமான மந்தைவெளி புறம்போக்கு எனுமிடத்தில் சுமார் பத்து குடும்பங்கள் வீட்டுமனை இல்லாததால், குடிசைபோட்டு வாழ்ந்துவருகின்றனர். இன்னும் அந்தநிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 40 வருடங்களில் எங்களுக்கு அரசு வீட்டுமனைப் பட்டா வழங்கியது கிடையாது. இது குறித்து நாங்களும், ஐந்து முறை வட்டாட்சியரிடமும், ஐந்து முறை மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்திருக்கிறோம். எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. ஒரு நம்பிக்கையில் இன்றும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மட்டுமே பேச முடிந்தது. அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள். நல்லது நடந்தால் சரி” என்றார் வருத்தத்துடன்.

கரூர்: `நிலத்தைப் பிரிச்சுக் கொடுங்க’ -சொத்துப் பிரச்னையில் தம்பியின் கழுத்தறுத்த சகோதரர்கள்!

இது குறித்து ஆரியூர் கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்புகொண்டு கேட்டோம். `நான் ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன். போனில் நாங்கள் தகவல்களைக் கூறக் கூடாது’ என்றும் பேச மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து, எதிர்த்தரப்பில் பார்த்தசாரதி என்பவரிடம் இது குறித்துக் கேட்டோம். ``நான் அப்போது குழந்தை. எனக்கு விவரம் தெரிந்தது முதல் எங்க சித்தப்பா ஓட்டி, பயிர்வெச்சிக்கிட்டு இருந்தாரு. எனக்கு விவரம் தெரிஞ்சப்பவே பட்டா வெச்சிருந்தாங்க. எனக்கு 49 வயசு ஆகுது. எனக்கே இது அரசு நிலமென்பது தெரியாது. மூத்தவர்களைக் கேட்டால் எத்தனை வருட பூர்வீகம் என்று தெரியவரும்” என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு