Published:Updated:

`நீண்ட நாள் கோரிக்கை’ - 101 பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிய விழுப்புரம் ஆட்சியர்!

சாதிச் சான்றிதழ் வழங்கும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்.
சாதிச் சான்றிதழ் வழங்கும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்.

சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் தவித்துவந்த பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 101 மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அடிப்படை உரிமைக்காகவும் போராடும் சூழலுக்கு பெரிதளவில் தள்ளப்பட்டவர்கள் பழங்குடியினர் சமூகத்தினர். வறுமையில் வாடும் தங்கள் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்து படிக்கவைப்பதற்காக, சாதிச் சான்றிதழ் கேட்டுப் பல வருடங்களாக அரசு அலுவலகங்களின் படிகளில் ஏறியும் பெரும்பாலும் அந்தக் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதில்லை.

இந்தியாவில் வாழும் ஆப்ரிக்க பழங்குடி இனத்தின் வரலாறும் இன்றைய துயரங்களும்!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
தே.சிலம்பரசன்

அப்படிப்பட்ட பழங்குடியினர் சமூக மக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக வசித்துவருகின்றனர். தங்களது குழந்தைகளின் படிப்புக்காகச் சாதிச் சான்றிதழ் கேட்டுத் தொடர் கோரிக்கை வைத்துவந்தனர் பெற்றோர்கள். 101 பழங்குடியின மாணவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார் அண்மையில் பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் மோகன். விக்கிரவாண்டியை அடுத்த எண்ணாயிரம் பகுதிக்கு நேற்று (26.07.2021) காலை நேரில் சென்ற ஆட்சியர், அங்கு வசிக்கும் இருளர் சமூக மக்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர், சாலை ஆகிய அடிப்படை வசதிகளை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் செய்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, நந்திவாடி கிராமம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கான சாதிச் சான்றிதழை நேரில் வழங்கியிருக்கிறார்.

விழுப்புரம், கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி வட்டத்துக்குட்பட்ட ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 87 மாணவர்களுக்கு இந்து - காட்டுநாயக்கன் சாதிச் சான்றிதழும்; விக்கிரவாண்டி மற்றும் வானூர் வட்டத்துக்குட்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த 14 மாணவர்களுக்கு இந்து இருளர் சமூகத்துக்கான சான்றிதழையும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஹரிதாஸ் முன்னிலையில் வழங்கியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் மோகன். இந்தச் செயல் பலரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.

எண்ணாயிரம் இருளர் குடில்
எண்ணாயிரம் இருளர் குடில்

இது தொடர்பாக காட்டுநாயக்கன் ஜனநாயக சீர்திருத்தச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்துவிடம் பேசினோம். ``10 ஆண்டுகளுக்கு மேல் இந்தச் சங்கம் இருக்கிறது. ஆனால், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக சாதிச் சான்றிதழ் கேட்டுப் போராடிவருகிறோம். இதற்கு முன்னதாகவும் அவ்வப்போது சில சாதிச் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறோம். அதிக எண்ணிக்கையில் ஒரே முறையில் பெற்றது இல்லை. இந்த ஆட்சியர் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஜூன் மாதம், 21-ம் தேதி சாதிச் சான்றிதழ் கோரி 75 மனுதாரர்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுத்திருந்தோம். அவற்றில் குழந்தைகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். ஒரு மாத இடைவெளியில் விசாரணை மேற்கொண்டு, 87 மாணவர்களுக்கு காட்டுநாயக்கன் சமூகச் சான்றிதழை வழங்கியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர். மீதமுள்ள மனுக்களையும் உரிய முறையில் பரிசீலனை செய்தும், விசாரித்தும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் எங்கள் சமூக மாணவர்கள் படிப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு