கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை 2,63,533 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,52,28,996-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்திய அளவில் 4,329 பேர் இந்தக் கொடுந்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதும், வெளியில் செல்லாமல் இருப்பதும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாகப் பின்பற்றுவதும் இந்நொடியின் உயிர்காக்கும் நடவடிக்கைகள் ஆகியுள்ளன.

இந்தக் கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமன்றி, முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றிவரும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களும்தான். இவர்களில் சிலர் இந்தக் கொரோனா பணியில் தங்களின் இன்னுயிரையும் பறிகொடுத்துள்ளனர்.
இந்நிலையில்தான் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில், கர்ப்பமாக இருக்கும் விழுப்புரம் மாவட்ட பெண் காவலர்களுக்கு சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எஸ்.பி அரசு நிகழ்ச்சி காவல் பணியில் இருந்ததனால், இது தொடர்பாக எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரேவதியிடம் பேசினோம்.
``விழுப்புரம் மாவட்டத்தில் 28 மகளிர் பெண் காவலர்கள் கர்ப்பமாக உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் இப்பெண்காவலர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களின் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி, முன்னுதாரணமாக கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு சிறப்பு விடுப்பு நேற்றிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

`நம் வீட்டுப் பெண் கர்ப்பிணியாக இருந்தால் அவரை இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பணிசெய்ய விடுவோமா..?' என்று யோசித்த எஸ்.பி, கர்ப்பிணிப் பெண்காவலர்களுக்குக் கொரோனா தொற்றுக் காலம் முடியும்வரை சிறப்பு விடுப்பு வழங்கியுள்ளார்" என்றார்.