Published:Updated:

`அண்ணன்போல ஆறுதல் சொன்னார்!’- வாட்ஸ்அப் தகவலால் மாற்றுத் திறனாளியை நெகிழவைத்த விழுப்புரம் எஸ்.பி

உதவி
உதவி

வாட்ஸ்அப் குழுவில் கோரிக்கை வைத்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு நேரில் சென்று உதவி செய்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. அதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைத்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

அதேநேரத்தில் சக உயிர்கள் மீதான அன்பையும், உதவி செய்யும் எண்ணத்தையும் இந்தச் சூழல் உருவாக்கி இருக்கிறது. சமூக வலைதளம் மூலமாகவும், தொலைபேசிகள் வாயிலாகவும் கேட்கப்படும் உதவிகளுக்கு, இளைஞர்கள், மாணவர்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரும் உதவி செய்யும் சம்பவங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம், சித்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். மாற்றுத் திறனாளியான இவர், விழுப்புரம் வாட்ஸ்அப் குழு ஒன்றில் நேற்று ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். அதில், ``நான் ஒரு மாற்றுத் திறனாளி. இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை பாதிக்கப்பட்ட நான், கொரோனா வைரஸாலும், ஊரடங்கு சட்டத்தாலும் வீட்டில் முடங்கிக்கிடக்கிறேன்.

ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்
ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்

மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் வீட்டில் உணவுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். அதனால் இந்தக் குழுவில் உள்ளவர்கள் யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்ததுடன், அதில் தனது தொலைபேசி எண்ணையும் இணைத்திருந்தார்.

அந்தத் தகவலைப் பார்த்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கிக் கொண்டு போய் ராதாகிருஷ்ணனுக்கு நேரில் கொடுத்திருக்கிறார். சித்தாமூர் ராதாகிருஷ்ணனை செல்போனில் தொடர்புகொண்டு பேசினோம். ``இரண்டு கால்களும், ஒரு கையும் செயலிழந்த மாற்றுத் திறனாளி நான்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்

சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். போன மாசம் போட்ட ஊரடங்கு உத்தரவால பாதிச் சம்பளம் கொடுத்த நிர்வாகம், அடுத்த மாசம் சம்பளம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எங்கிட்ட இருந்த கொஞ்சப் பணமும் செலவாயிடுச்சி. எனக்கு மூணு பசங்க. அதுல ஒண்ணு கைக்குழந்தை.

என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் வாட்ஸ்அப் குரூப்புகள்ல உதவி கேட்டேன். அதுல ஒரு குரூப்புல இருந்த விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் ஐயா, நான் போட்ட தகவலைப் பார்த்துட்டு போன் பண்ணாங்க. என் வீடு, அட்ரஸ்லாம் கேட்டாங்க. மறுநாளே அவரு என் வீட்டுக்கு வந்து, ஒரு மாசத்துக்குத் தேவையான அரிசி, மளிகை, காய்கறிகள், குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள், முகத்துல போடுற மாஸ்க்னு எல்லாத்தையும் வாங்கிக் குடுத்தாரு. அப்புறம் எந்த உதவி தேவைப்பட்டாலும் எனக்கு போன் பண்ணுங்கனு சொல்லிட்டு, மறுபடியும் வேலைக்குப் போகும்போது எதாவது உதவி தேவைப்பட்டாலும் எங்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லிட்டுப் போனாரு. நிலைமை சீக்கிரம் சரியாகிடும்னு கூடப்பொறந்த அண்ணன் போல எனக்கு ஆறுதல் சொல்லிட்டுப் போனாரு. அவரு செஞ்ச உதவியை நானும், என் குடும்பமும் மறக்க மாட்டோம்” என்று நெகிழ்ந்தார்.

விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார்
விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார்

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டோம். ``அந்த இளைஞர் ராதாகிருஷ்ணன் நடக்கவே முடியாத நிலையில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தப் பேரிடர் காலத்தில் அவரைப் போலவே நிறைய மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் ஒருவனால் உதவிகள் செய்துவிட முடியாது. அதேசமயம் எனது கவனத்துக்கு வரும் தகவலின் அடிப்படையில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன் அவ்வளவுதான். சக மனிதர்களிடம் அன்பைப் பகிருங்கள். உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்யுங்கள் என்பதுதான் இளைஞர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு