Published:Updated:

`ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் அலெர்ட் செய்யும்!' - இளைஞர் வடிவமைத்திருக்கும் புதிய கருவி

கருவி
கருவி

இதில், ஒரு ஆக்ஸிஜன் சேஃப்டி டிவைஸ் பேண்ட் மற்றும் ஒரு ரிசீவர் இருக்கும். அந்த பேண்டை, கொரோனா நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களோட கையில அணிந்துகொண்டால் போதும்.

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு பலரின் உயிர்களைப் பறித்துச் சென்றது. நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ், மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. சமீபத்திய சில மாதங்களாக மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்த தகவல்களும் அதிகம் வெளியாகி வந்தன. இந்நிலையில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கும் கருவி ஒன்றைக் கைக் கடிகாரம் வடிவில் வடிவமைத்துள்ளார் முகமது ஷாகுல் ஹமீத்.

இளம் பொறியாளரான முகமது ஷாகுல் ஹமீத், ஏற்கெனவே கண்டறிந்த 3 கண்டுபிடிப்புகளைப் பற்றி நெடும் கட்டுரையாக கடந்த மே மாதம் 16-ம் தேதி நமது விகடன் தளத்தில் எழுதி இருந்தோம். இந்நிலையில்தான் இந்தப் புதிய கருவியை வடிவமைத்திருக்கிறார்.

 K.முகமது ஷாகுல் ஹமீத்
K.முகமது ஷாகுல் ஹமீத்
தே.சிலம்பரசன்
அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்தும் விழுப்புரம் இளைஞர்... உரிய அங்கீகாரம் கிட்டுமா?!

இதுதொடர்பாக அவரிடம் பேசினோம்.

``கொரோனா பெருந்தொற்றில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால மூச்சுத் திணறல் ஏற்பட்டு நிறைய பேர் இறந்து போயிடுறாங்க. அதையெல்லாம் பார்த்தப்போ மனசுக்கு கஷ்டமா ஆயிருச்சு. நம்மால முடிஞ்சது ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. அதைத் தொடர்ந்து, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவு குறையும்போது குடும்ப உறுப்பினர்களுக்கு அது குறித்த குறுஞ்செய்தியோடு, அழைப்பும் போகும் வகையில `ஆக்ஸிஜன் சேஃப்டி அலர்ட் டிவைஸ்' ஒன்றைக் கண்டுபிடிச்சிருக்கேன்.

இதில், ஒரு ஆக்ஸிஜன் சேஃப்டி டிவைஸ் பேண்ட் மற்றும் ஒரு ரிசீவர் இருக்கும். அந்த பேண்டை, கொரோனா நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களோட கையில அணிந்துகொண்டால் போதும். அதில் உள்ள பல்ஸ் ஆக்ஸிமீட்டர் சென்சார், உடலில் ஆக்ஸிஜன் அளவைக் கணக்கிட்டு கண்காணித்துக்கொண்டே வரும். ஆக்ஸிஜன் அளவு குறையும் பட்சத்தில் டிரான்ஸ்மிட்டர் மூலம் ரிசீவருக்கு தகவல் போகும். அத்துடன் ரிசீவரில் ஒரு அவசர கால பொத்தான் இருக்கும். அதை அழுத்தினா, `எனக்கு உதவி தேவை'னு உறவினர்களுக்குக் குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு போகும்.

ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறையும் பட்சத்தில், தொடர்ச்சியாக மூன்று முறை தானாகவே அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி உறவினர்களுக்குப் போகும். எப்படியென்றால், இதில் ஒரு சிம் கார்டு பொருத்தப்பட்டிருக்கும். அபாயம் என்ற கட்டத்துல தகவல் தெரிவிக்க வேண்டிய நபர்களின் போன் நம்பரை அதுல முன்னரே சேவ் பண்ணிடணும். ஆக்ஸிஜன் அளவு குறையும்போது, அத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் போகும். உடன் அழைப்பும் போகும். அதனால கொரோனா நோயாளிகளுக்கு விரைவாக ஆக்ஸிஜன் அளித்து காப்பாற்றிவிட முடியும்.

கருவி
கருவி

கூடவே, ஆப் (மொபைல் செயலி) ஒன்றையும் உருவாக்கியிருக்கேன். கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட நபர் இந்த `ஆக்ஸிஜன் அலர்ட் டிவைஸ்' வைத்திருந்தா, இந்த ஆப்பை பயன்படுத்தி கண்காணிப்பு அறையிலிருந்தே மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகளால் பாதிப்படைந்தவர்களை கண்காணிக்க முடியும்; நோயாளியின் ஆக்ஸிஜன் அளவையும் துள்ளியமாகக் கண்காணிக்க முடியும். ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ள நபர்களை எளிமையாக கண்டறிந்து உரிய சிகிச்சையை விரைவாகக் கொடுக்க முடியும். மருத்துவர்களோட வேலைச் சுமையை இதனால குறைக்க முடியும். கொரோனா நோயாளிகளின் பயத்தையும் குறைக்க முடியும்.

இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்க ரூ.2,000 செலவாச்சு. அரசு உதவினா இன்னும் குறைந்த விலையில் தயாரிக்கலாம். காப்புரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கேன்" என்றார்.

வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு