Published:Updated:

``இது எனக்கு ஹாபி மட்டும் இல்ல; எதிர்காலமும்தான்!" - ஓவியத்தில் கலக்கும் அரசுப்பள்ளி மாணவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாணவி தேஜாஸ்ரீ
மாணவி தேஜாஸ்ரீ ( தே.சிலம்பரசன் )

அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்து வரும் தேஜாஶ்ரீ, கண்களைக் கவரும் வகையில் அழகிய வண்ண ஓவியங்களைத் தீட்டி வருவதோடு, பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளையும் பெற்று அசத்தி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம், விராட்டிக்குப்பம் சாலை அருகே உள்ள போதிதர்மன் நகரில் வசித்து வருகின்றனர் ராஜேஷ்கண்ணன் - இளையரசி தம்பதி. இவர்களின் மூத்த மகள் 13 வயதாகும் தேஜாஸ்ரீ. ஓவிய ஆசிரியரான தன் தந்தையைப் பார்த்து சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட இந்தச் சுட்டி, கடினமான ஓவியங்களையும் கண் கவரும் வகையில் எளிதில் வரைந்து முடித்து அசத்துகிறார்.

தேஜாஸ்ரீ
தேஜாஸ்ரீ
உலக சாம்பியன் பட்டம்... அரசுப் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா சாதனை!

தன் வீட்டில் தான் வரைந்த ஓவியத்துக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த தேஜாஸ்ரீயிடம் பேசினோம். ``விழுப்புரம், பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில படிக்கிறேன். அப்பா டிராயிங் டீச்சர். அதனால அப்பா வரைவதைப் பார்த்து நானும் சின்ன வயசுல இருந்தே வரைவதற்குக் கத்துக்கிட்டேன். ஓவியம் வரைய எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போதிலிருந்தே நிறைய டிராயிங் போட்டிகள்ல ஜெயிச்சிருக்கேன். அப்பாவும் அம்மாவும் எனக்கு ஓவியத்துக்குத் தேவையான எல்லா பொருள்களையும் வாங்கித் தருவாங்க'' என்றவர், ஓவியத்தில் தான் முயன்ற சாதனைகள் பற்றிப் பகிர்ந்தார்.

``12 அடி நீலம் பிரஷ் வச்சு தொழிலாளர் தினத்தன்று ஓவியம் வரைந்து `கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல ரெக்கார்ட் பண்ணி இருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் 11 பேர் கூட சேர்ந்து காந்தி ஜெயந்தி அன்றைக்கு 30 நிமிடத்தில் 500 மீட்டர் ரிப்பனில் 2,000 காந்தி தாத்தா படம் வரைந்தோம். அப்போ `ஓவிய சிறகு விருது' கொடுத்தாங்க. அதேபோல `சாதனைப் பெண் விருது'ம் வாங்கியிருக்கேன். இது மட்டுமல்லாம, கொரோனா வைரஸ் பரவி இருக்கும் இந்த நேரத்துல நிறைய ஆன்லைன் போட்டியில் கலந்துகிட்டு நிறைய சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன். நேற்று முன்தினம் அரசு சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றுள்ளேன்.

ஓவியத்தை சும்மா ஹாபியா நான் வரையலை. இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போவேன். எனக்கு எதிர்காலத்தில் டிராயிங் டீச்சராகவோ, கட்டடக்கலையில் இன்டீரியர் டிசைனராகவோ ஆகணும்னு ஆசை" என்கிறார் கண்கள் மின்ன.

குடும்பத்தாருடன் தேஜாஸ்ரீ
குடும்பத்தாருடன் தேஜாஸ்ரீ

தேஜாஸ்ரீயின் அப்பா ராஜேஷ் கண்ணனிடம் பேசினோம். ``தேஜாஸ்ரீ படிக்கிற பூந்தோட்ட நகராட்சிப் பள்ளியில் 2012-ல் இருந்து நான் பகுதிநேர ஓவிய ஆசிரியரா இருக்கேன். தேஜாஸ்ரீயை தொடக்கக் கல்வி ஆங்கில வழியில படிக்க வச்சேன். பகுதிநேர ஆசிரியரா இருந்து வாங்குற சம்பளம் ஃபீஸ் கட்டுவதற்கு போதலை. அதனால, அவங்களை அரசுப் பள்ளிக்கு மாத்திட்டேன். நான் டிராயிங் பண்ணும்போது, சின்ன வயசுல இருந்தே என் கூட பக்கத்துல உட்காந்துகிட்டு அவங்களும் டிராயிங் பண்ணுவாங்க. வளர வளர நாளிதழ்கள்ல வரக்கூடிய ஓவியம் தொடர்பான பகுதிகள்ல பிராக்டீஸ் பண்ணுவாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியே படிப்படியா நல்லா டிராயிங் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஏதாவது கரெக்ஷன் என்றால் மட்டும்தான் என்கிட்ட வந்து கேட்பாங்க. பள்ளி அளவிலும் சரி, பள்ளிகள் அளவிலும் சரி... ஓவியப்போட்டி என்றாலே இவங்களுக்கு பரிசு நிச்சயம் உண்டு. படிப்பிலயும் ரொம்ப கெட்டிக்காரிதான். சில விருதுகளும், 70 சான்றிதழ்களும் இப்போவரை வாங்கியிருக்காங்க. இப்போ கைவினைப் பொருள்கள் வகுப்புக்குப் போறாங்க.

மாணவி தேஜாஸ்ரீ
மாணவி தேஜாஸ்ரீ
தே.சிலம்பரசன்
11 வயதில் 70 உலக சாதனை; `இளம் யோகா டீச்சர்' பட்டம்; யோகாவில் கலக்கும் சிறுமி பிரிஷா!

அவங்க ஆசைப்படியே வளரணும்னு நினைக்கிறோம். ஓவியம் அவங்க வாழ்க்கையில எப்பவும் ஒரு அங்கமா இருக்கணும்னு விரும்புறோம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

சுட்டி தேஜாஸ்ரீயின் ஓவியப் பயணம் தொடரட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு