Published:Updated:

விழுப்புரம்: சிதறிக்கிடந்த 21,700 ரூபாய், எஸ்.பி-யிடம் ஒப்படைத்த சிறுவன்... குவியும் பாராட்டுகள்!

பணத்தை ஒப்படைத்த சிறுவன்
பணத்தை ஒப்படைத்த சிறுவன்

பணத்தை தொலைத்தவர் யார் என்று தெரியாத காரணத்தால் தன் அம்மாவுடன் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று, கீழே கிடந்த 21,700 ரூபாயை ஒப்படைத்துள்ளார் குமரகுரு.

நம் அன்றாட வாழ்வில், பெற்றோர் உறவினர்களின் பேச்சு முறையும், கல்வியும், வாழ்க்கையின் சுற்றுச்சூழல் காரணிகளுமே வளரும் குழந்தைகளின் எண்ணங்களாகவும் செயல்களாகவும் மாற்றம் பெறுகின்றன. நல்ல எண்ணங்கள் குழந்தைகள் மனதில் பதிந்து உருப்பெறும்போது அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல மற்றவர்களின் வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக அமைகிறது. நல்ல குணநலன்களுடன் வளரும் குழந்தைகள் மூலம் உருவாகும் உலகின் எதிர்காலமே மிகச் சிறந்த எதிர்காலமாக அமையும்.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் வசித்து வருகிறார் ஹேமலதா. இவரின் இளைய மகன் குமரகுரு (14). விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்புப் பயின்று வருகிறார். தற்போது நிலவும் கொரோனா சூழல் காரணமாகப் பள்ளிகள் தொடங்கப்படாததால் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் பாடங்களைப் பயின்று வருகிறார் குமரகுரு.

பணத்தை ஒப்படைத்த சிறுவன்
பணத்தை ஒப்படைத்த சிறுவன்

வகுப்புகள் இல்லாத நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தன் நண்பர்களுடன் விளையாட செல்லும் இவர், நேற்று முன்தினம் (03.02.2021) கிரிக்கெட் விளையாடுவதற்காகத் தன் நண்பர்கள் இருக்கும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியின் அருகில் உள்ள பகுதிக்கு மிதிவண்டியில் சென்றுள்ளார். செல்லும் வழியில் சாலையோரமாக ஆஞ்சநேயர் கோயில் அருகே கிடந்த பணத்தைக் கண்டு, எடுத்துச் சென்று தன் அம்மா ஹேமலதாவிடம் கொடுத்துள்ளார். பணத்தைத் தொலைத்தவர் யார் என்று தெரியாத காரணத்தால், தன் அம்மாவுடன் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று எஸ்.பி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து நடந்த நிகழ்வுகளைக் கூறி, கீழே கிடந்த பணம் 21,700 ரூபாயை ஒப்படைத்துள்ளார். மாணவனின் நேர்மையையும் குணத்தையும் பாராட்டும் வகையில் மாணவருக்கும், மாணவனின் அம்மாவுக்கும் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்துள்ளார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. மேலும் மாணவருக்கு அப்துல்கலாமின் புத்தகத்தை அளித்து வாழ்த்துகளையும் கூறியுள்ளார். இந்த மாணவரின் செயல் பலராலும் தற்போது பாராட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து குமரகுருவின் அம்மா ஹேமலதாவிடம் பேசினோம்.

``குமரகுரு இப்போ எட்டாம் வகுப்புப் படிக்கிறான். நேத்து காலையில விளையாடப் போகும்போது, வழியில கிடந்த பணத்தை எடுத்து வந்து எங்கிட்ட கொடுத்து, `யாரோடதுனு பார்த்துக் கொடுக்கணும்மா'னு சொன்னான். எண்ணிப் பார்த்தப்போ 21,700 ரூபாய் இருந்தது. என் கணவர் பத்மநாபன் இறந்து ரெண்டு வருஷம் ஆகுது. அதனால என் குழந்தைகளுடன் விக்கிரவாண்டியில இருக்குற என் அண்ணன் வீட்ல வசிக்கிறேன். பணம் பற்றி என் அண்ணன் செந்தில் முருகன்கிட்ட சொன்னேன்.

என் தம்பி வினோத், கிளியனூர் காவல் நிலையத்துல வேலைபார்க்கிறார். அவர்கிட்ட என் அண்ணன் இது குறித்துப் பேசினார். `எஸ்.பி-யை சந்திச்சு நேர்ல பணத்தைக் கொடுங்க'னு அவர் சொன்னார்.

உடனே, அண்ணன், நான், குமரகுரு மூணு பேரும் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்துக்குப் போனோம். எஸ்.பி-யை சந்திச்சு 21,700 ரூபாயைக் கொடுத்தோம். எஸ்.பி, குமரகுருகிட்ட நடந்ததைக் கேட்டறிஞ்சார். அவனுக்கு சால்வை அணிவித்து, அப்துல்கலாம் ஐயாவின் புத்தகம் கொடுத்துப் பாராட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. நாம பசங்களுக்கு, எப்பவும் நேர்மையா இருக்கணும்னு சொல்லிக் கொடுக்கணும்.

கீழே கிடந்த காசை எடுத்து உரியவங்ககிட்ட சேர்க்கணும்னு சொல்லிக் கொடுக்கணும். இந்தச் செய்தியைப் படிக்கிற பசங்களுக்கு, `ஒருவேளை நாளைக்கு நமக்கும் இப்படி ஏதாவது கிடைச்சா, இந்தப் பையனைப்போல உரியவங்ககிட்ட சேர்க்கணும்'னு தோணினா, எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அப்படி நினைக்கிற குழந்தைகளை உற்சாகமூட்டுற மாதிரி இருக்கு எஸ்.பி சார், குமரகுருவைப் பாராட்டினது.

பணத்தைத் தொலைச்சவங்க யார்னு தெரியாததால, எங்க போன் நம்பர் மற்றும் அட்ரஸ் வாங்கிக்கிட்டாங்க. அவங்களை கண்டுபிடிச்சதும், எங்களை நேரில் அழைப்பதா எஸ்.பி சொல்லியிருக்கார்'' என்றார்.

மாணவர் குமரகுருவிடம் பேசினோம்.

``நான் சைக்கிள்ல போயிட்டு இருக்கும்போது ஆஞ்சநேயர் கோயில்கிட்ட நிறைய காசு கிடந்துச்சு. நான் அதை எடுக்கலை. அம்மாகிட்ட வந்து சொல்லி, `பாவம்மா யாரோடதுனு பார்த்துக் கொடுக்கணும்'னு சொன்னேன். அம்மா அதை எடுத்துட்டு வரச்சொல்லி எண்ணிப் பார்த்துட்டு, போலீஸ் மூலமா தொலச்சவங்ககிட்ட கொடுத்துடலாம்னு சொன்னாங்க. மாமா, நான், அம்மா மூன்று பேரும் விழுப்புரம் போய் எஸ்.பி சாரை நேர்ல பார்த்துக் கொடுத்தோம்.

பணத்தை ஒப்படைத்த சிறுவன்
பணத்தை ஒப்படைத்த சிறுவன்

`குட் பாய்... இப்படித்தான் இருக்கணும். எந்த உதவினாலும் தயங்காம எங்கிட்ட கேட்கலாம். பணத்தை தொலைச்சவங்களைக் கண்டுபிடிச்சதும் உன்னை கூப்பிடுறேன். அவங்ககிட்ட கொடுத்துடலாம்'னு எஸ்.பி சார் சொல்லியிருக்கார். தொலைச்சவங்ககிட்ட சீக்கிரமா அந்தப் பணம் போய் சேரணும். நான் எதிர்காலத்துல நேர்மையான போலீஸ் ஆபீஸரா வருவேன்" என்றார் குமரகுரு மழலைக் குரலில்.

குழந்தைகளிடம் நல்லதைப் பேசுவதும், அவர்களுக்கு நல்லதை சொல்லித் தருவதும் எதிர்கால சமுதாயத்தை ஆரோக்கியமாகக் கட்டமைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு